20 ஐ நாடாளுமன்றத்தில் தோற்கடிக்க ஐந்து பிரதான கட்சிகள் தயார் நிலை!

5c04c3ed 8126 4dea 8d25 33bd57d4d4e0 696x464 1
5c04c3ed 8126 4dea 8d25 33bd57d4d4e0 696x464 1

நாடாளுமன்றத்தில் அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியன வாக்களிக்கவுள்ளன.

20 ஆவது திருத்தச் சட்ட வரைவு தொடர்பில் நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 21, 22 ஆம் திகதிகளில் விவாதம் நடைபெறவுள்ளது. 22 ஆம் திகதி இரவு வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

20ஆவது திருத்தச் சட்ட வரைவு தொடர்பில் 5 நாட்களாவது விவாதம் அவசியம் என ஆரம்பத்தில் கோரியிருந்த எதிரணித் தலைவர்கள் இறுதியில் மூன்று நாட்களாவது நடத்தப்படவேண்டும் என வலியுறுத்தினர். எனினும், இரண்டு நாட்களை மாத்திரமே விவாதத்துக்கு வழங்குவதற்கு அரசு இணக்கம் வெளியிட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 21, 22ஆம் திகதிகளில் முற்பகல் 10 மணி முதல் இரவு 7.30வரை விவாதம் நடைபெறவுள்ளது. 22ஆம் திகதி மாலை முதல் வாக்கெடுப்பு நடத்தப்படும். குழுநிலை விவாதத்தின்போது திருத்தங்களை அரசு மேற்கொள்ளவுள்ளது.

20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராக சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியன வாக்களிக்கவுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி, எமது மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் இன்னும் உறுப்பினர்களை நாடாளுமன்றத்துக்கு நியமிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.