ஜனாதிபதி தொல்பொருள் செயலணியின் நடவடிக்கைகள் இன முரண்பாடுகளை தோற்றுவிக்கும்- தவராசா கலையரசன்!

IMG 20201018 102318
IMG 20201018 102318

நாட்டில் மீளவும் ஒரு இன ரீதியான அடக்குமுறையை சந்திக்க தயாரில்லை ஜனாதிபதி தொல்பொருள் செயலணியின் நடவடிக்கைகள் இன முரண்பாடுகளை தோற்றுவிக்கும் என தவராசா கலையரசன் தெரிவித்தார்.

இன்று பொத்துவில் ஊறணி அறநெறி பாடசாலை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சிவநெறி அறப்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்..

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் எமது இன ரீதியான விகிதாசாரம் பின் நோக்கியே செல்கின்றது. அதிலும் கிழக்கு மாகாணம் கேள்விக்குறியான நிலையில் காணப்படுகின்றது. கடந்த காலத்தில் இவற்றிற்கான காரணம் யுத்த சூழலாக குறிப்பிட்டோம். தற்காலத்தில் அரசாங்கம் எடுக்கும் ஒவ்வொரு விடயமும் எங்களது மக்களின் கலாச்சாரத்தை கேள்விக்குறியாக்குகின்ற அடிப்படையில் விடையங்கள் அனைத்து கையாளப்படுகிறது.

இவ்வாறான செயற்பாடுகளிலிருந்து எங்களுடைய கலாச்சாரத்தையும் மக்களையும் பாதுகாக்கின்ற விடையம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. நேற்று (17.10.2020) யாழ்ப்பாணத்தில் தமிழ் தலைவர்கள் இணைந்த தமிழ் மக்கள் கூட்டமைப்பு ஒன்றிணைந்து கூடிய கூட்டத்தில் ஜனாதிபதியின் தொல்பொருள் செயலணியின் செயற்பாடுகள் குறித்து அதிகம் பேசப்பட்டது .

குறிப்பாக கிழக்கு மாகாணத்தை மையப்படுத்திய சனாதிபதியின் தொல்பொருள் செயலணி அதன் செயற்பாடுகளை மிகவும் தீவிரப்படுத்தியுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆரம்பித்து அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் , திருக்கோவில் , மட்டக்களப்பு , திருகோணமலை போன்ற எமது பூர்வீக நிலங்களை அத்துமீறி பிரவேசித்து கபளீகரம் செய்வதற்கான முன்னெடுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறான செயற்பாடுகள் எதிர்காலத்தில் இனரீதியான முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளாக அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது. இதனை அவர்கள் தவிர்க்க வேண்டும். நாங்கள் இந்த நாட்டில் சமத்துவமாக சமாதானமாக வாழ்வதற்கான முழு சிந்தனையோடு செயற்படுகின்றோம் . இந்த நாட்டில் மீளவும் ஒரு இன ரீதியான அடக்குமுறையை சந்திக்க தயாரில்லை. ஏனைய இனங்களோடு சமாதானமாக வாழ்வே விரும்புகின்றோம்.

அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரைக்கு ஒதுக்கப்பட்ட காணிகளில் அத்துமீறி சிங்கள மக்களை குடியமர்த்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அங்கு எமது அரசியல்வாதிளின் நடவடிக்கைகளாலும் , மட்டு மாவட்டநிருவாக ரீதியான அதிகாரிகளாலும் அத்துமீறிய குடியேற்றத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது அதிரடியான இட மாற்றங்கள் இந்த அரசினால் முன்னெடுக்கப்பட்டதை காணமுடிகிறது என தெரிவித்தார் .

பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ், பொத்துவில் பிரதேச சபையின் உப தவிசாளர் பீ.பார்த்தீபன், அம்பாறை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர்,கே.ஜெயராஜ் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர், ஆசிரியர்கள், மாணவர்கள் ,இந்து அமைப்பினரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.