அபாயம் இல்லையென சுகாதார விதிமுறைகளைப் பேணாமல் மக்கள் செயற்படுகின்றனர்!

GMOA2 1 1
GMOA2 1 1

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதையடுத்து, வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் பாதிப்புக்கள் குறைவு என்று பொது மக்கள் மத்தியில் அநாவசிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால், அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் பேணாமல் செயற்படுகின்றமையை அவதானிக்க முடிகிறது என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் செயலாளர் வைத்தியர் சேனால் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் ,

மினுவாங்கொடை கொத்தணி உருவானதன் பின்னர் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக உயர்வடைந்ததைப் போன்று குறுகிய காலத்தில் அதிகளவான மரணங்களும் பதிவாகியுள்ளன. அண்மையில் பதிவாகிய மரணங்களில் 50 சதவீதமானோர் வீடுகளிலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

கொரோனா தொற்றினால் பாரிய பாதிப்புக்கள் எதுவும் இல்லை என்று மக்கள் அநாவசிய நம்பிக்கையை கொண்டுள்ளனர்.

எனினும் தற்போதுள்ள அபாயமான நிலைமையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். வெவ்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இந்த தொற்று ஏற்பட்டால் அதன் விளைவுகள் பாரதூரமானவையாக இருக்கும்.

எவ்வாறிருப்பினும் அடிக்கடி மரணங்கள் பதிவாக ஆரம்பித்த போதே அவை தொடர்பில் ஆராய்வதற்காக மீளாய்வு குழுவொன்றை நியமிக்குமாறு நாம் வலியுறுத்தினோம்.

அதற்கான நடவடிக்கைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனவே எதிர்வரும் தினங்களில் இவ்வாறு வீடுகளிலேயே மரணங்கள் பதிவாகினால் அவை தொடர்பில் பகுப்பாய்வு செய்யப்படும் என்று எதிர்பார்க்கின்றோம்.

தற்போது ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதால் வைரஸ் கட்டுப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதாக தவறான நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மீண்டும் அடிப்படை சுகாதார விதிமுறைகளை மறந்து மக்கள் செயற்பட ஆரம்பித்துள்ள அபாய நிலைமையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இது முற்றிலும் தவறான விடயமாகும்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் மாத்திரமின்றி ஏனைய பகுதிகளில் உள்ள மக்களும் அவதானமாகவே அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.