யாழ். மருத்துவ பீடத்தில் மீண்டும் பி. சி. ஆர் பரிசோதனை ஆரம்பம்

114830317 9175f67b b98c 49ba 894a fbb0b332624c
114830317 9175f67b b98c 49ba 894a fbb0b332624c

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் இன்று முதல்(11) மீண்டும் பி. சி. ஆர் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

மருத்துவ பீடத்தின் வழக்கமான பணிகளுக்குப் பாதிப்பேதும் ஏற்படாத வகையில் பி.சி.ஆர் பரிசோதனை ஆய்வு கூடம் மருத்துவ பீடத்தில் இருந்து வேறாக்கப்பட்டு, தனியான பாதை அமைக்கப்பட்டுள்ளதுடன், சர்வதேச நுண்ணுயிரியல் ஆய்வுத் தர நியமங்களுக்கமைய பி. சி. ஆர் பரிசோதனைகள் இன்று முதல் இடம்பெறவுள்ளன.

மருத்துவ பீடத்தில் இருந்து கடந்த முறை இந்தப் பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்களான அ. முருகானந்தன், மு. கலாமதி மற்றும் பேராசிரியர் செ. கண்ணதாசன் ஆகியோர் மட்டுமே இந்தப் பரிசோதனைகளில் ஈடுபடவுள்ளனர். இவர்களுடன் பணியாற்றுவதற்கென யாழ். பல்கலைக்கழகத்தினால் நான்கு நுண்ணுயிரியல் ஆய்வு கூடவியலாளர்களும் புதிதாகப் பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் தற்போதுள்ள பி. சி. ஆர் பரிசோதனை இயந்திரத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 60 மாதிரிகளே சோதனை செய்யப்பட முடியும். மருத்துவ பீடத்தினால் மேற்கொள்ளப்படும் பி. சி. ஆர் பரிசோதனை முடிவுகள் தினமும் மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்று மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எஸ். ரமேஸ் தெரிவித்துள்ளார்.