அமைச்சர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் 250 பேருக்கு மேல் கலந்து கொண்ட கூட்டத்தினை ஏன் தடுக்கவில்லை – சிறீதரன் எம்.பி!

FB IMG 1605413600889
FB IMG 1605413600889

யாழ்ப்பாணத்தில் இரண்டு நாட்கள் கொழும்பில் இருந்து வந்த அமைச்சர்களின் 250 பேருக்கு மேல் கலந்து கொண்ட கூட்டத்தினை ஏன் தடுக்கவில்லை என காவல்துறையினரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.

சிரமதானப் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்க கிளிநொச்சி காவல்துறையினர் சென்று சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தினர்.

பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடமும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராஜா ,வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் ஆகியோரிடமும் வாக்கு மூலத்தை பதிவு செய்ததுடன் அங்கு இருந்தவர்களிடம் தரவுகளையும் காவல்துறையினர் சேகரித்தனர்.

காவல்துறை வாக்கு மூலத்தில் நாடாளுமன்ற உறுப்பினரிடம் நாடு பூராகவும் கொரோனா தொற்று நோயின் அபாயகரமான சூழலில் தற்போது 30 பேருக்கு மேல் நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாது என்பது உங்களுக்கு தெரியாதா? எனக் கேட்டபோது யாழ்ப்பாணத்தில் இந்த மாதத்தின் 6 ஆம் 8 ஆம் திகதிகளில் கொழும்பில் இருந்து வந்த அமைச்சர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் 250 பேருக்கு மேல் இரண்டு நாட்களிலும் கலந்து கொண்டனர்.

அந்தக்கூட்டமானது சிறிய மண்டபத்தில் தான் நடைபெற்றது. அந்த மண்டபத்தில் 250 பேருக்கு மேல் கூடலாம் என்றால் 7ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் 30 பேருக்கு மேல் கலந்து கொள்வதா உங்களுக்கு பிரச்சினை என்றும் அந்த கூட்டத்தை நடாத்திய போது காவல்துறையினருக்கு தெரியாதா? எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் காவல்துறையினரிடம் கேள்வி எழுப்பினார்.