தமிழ் மக்களிற்கான விசேடமான ஒரு நிதி ஒதுக்கீடை எந்த அரசாங்கமும் செய்யவில்லை-சிவசக்தி ஆனந்தன்

sivasakthy ananthan
sivasakthy ananthan

கடந்த கால நல்லாட்சியினுடைய வரவு செலவுத்திட்டமாக இருக்கலாம் தற்போது ஆட்சியில் இருக்கின்ற இவ் அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டங்களில் வடக்கு கிழக்கில் யுத்தத்தால் அளிக்கப்பட்டிருக்கின்ற தமிழ் மக்களிற்கான விசேடமான ஒரு நிதி ஒதுக்கீடை எந்த அரசாங்கமும் செய்யவில்லைஎன முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்..

இன்று வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையிலே சோசலிச சமதர்ம ஆட்சியினை நிறுவுவதற்காக தோழர் பத்மநாபா பல முயற்சிகளை எடுத்திருந்தார். இடதுசாரி முற்போக்கு சக்திகளுடனும், சர்வதேசத்திலும் இப்போராட்டத்துடன் தொடர்புபட்ட பல தரப்புக்களுடன் மிக நெருக்கமான ஒரு தொடர்பை பேணியிருந்தார்.

இந்தியாவினுடைய ஆதரவு இல்லாமல் ஈழத்தமிழர்களின் பிரச்சனைக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு காணமுடியாது என்பதில் உறுதியாக இருந்தார். அந்த அடிப்படையிலேயே இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலே ஒரு சர்வதேச ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இலங்கை இந்திய ஒப்பந்தமானது தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வாக இல்லாவிட்டாலும் கூட ஒரு ஆரம்ப புள்ளியாக வடகிழக்கு இணைந்த மாகாண அரசாங்கத்தை ஏற்றுக்கொண்டது. அதனை ஏற்றுக்கொண்டதன் முக்கியமான நோக்கம் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்ற பல்வேறுபட்ட நெருக்கடிகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ளும் நோக்குடனே தோழர் பத்மநாபா அதனை ஏற்றுக்கொண்டார்.

இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 33 வருடங்கள் கடந்திருக்கின்ற நிலையிலே தற்போது ஆட்சியில் இருக்கக்கூடிய கோத்தபாய ராஜபக்ச அரசாங்கமானது இரண்டு நாடுகளுக்கிடையே நடைபெற்ற சர்வதேச ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக மீறுகின்ற வகையிலேயே நடந்து கொண்டிருக்கின்றது.

குறிப்பாக இலங்கை, இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இன்று தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்க கூடிய பல்லாயிரக்கணக்கான உயிர் இழப்புக்கள், சொத்து அழிவுகளில் இருந்து தமிழ் மக்கள் காப்பற்றப்பட்டிருக்க கூடிய நிலைமைகள் இருந்திருக்கும்.

தோழர் பத்மநாபா ஒரு தீர்க்க தரிசனத்தோடு நடந்து கொண்ட அந்த விடயங்களை அவருடைய பிறந்த தினத்திலேயே நாங்கள் அவரை நினைவுபடுத்த வேண்டிய ஒரு தேவை எங்களுக்கு இருக்கிறது.

தற்சமயம் சிங்கள பெரும்பான்மை மக்களுடைய வாக்குகளுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியில் உள்ள தற்போதை அரசாங்கமானது அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பூகோள அரசியல் போட்டிகளுக்குள்ளே சிக்குபட்டு போயிருக்கின்ற சூழ்நிலையிலே தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலம் பாதுகாப்பு தொடர்பாக இந்திய அரசாங்கம் மிகக் காத்திரமான ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய தமிழ் தேசிய கட்சிகளுக்கிடையே அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் ஒரு பரந்துபட்ட ஒரு பலமான ஒரு ஐக்கிய முன்னணியை கட்டியெழுப்பவதன் ஊடாகவும் இந்தியாவோடும் ஏனைய சர்வதேச நாடுகளுடனும் ஒரு சரியான தொடர்களை ராஜதந்திர ரீதியாக அணுகுவதன் ஊடாக எதிர்காலத்திலே தமிழ் மக்களுடைய அரசியல் இருப்பு மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

யுத்தத்திற்கு பின்னர் கொண்டு வரப்பட்டிருக்கின்ற நல்லாட்சியினுடைய வரவு செலவுத்திட்டமாக இருக்கலாம் தற்போது ஆட்சியில் இருக்கின்ற இவ் அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டங்களில் வடக்கு கிழக்கில் யுத்தத்தால் அழிக்கப்பட்டிருக்கின்ற தமிழ் மக்களிற்கான விசேடமான ஒரு நிதி ஒதுக்கீடை எந்த அரசாங்கமும் செய்யவில்லை.

நல்லாட்சி அரசாங்கத்திலேயோ அல்லது தற்போது இருக்கக்கூடிய கோட்டபாய ராஜபக்ச அரசாங்கத்திலேயும் எதையும் செய்யவில்லை. அதற்கு மாறாக யுத்தகாலத்தில் ஒதுக்கப்பட்ட நிதி போன்ற இரட்டிப்பான நிதியை பாதுகாப்பு செலவினங்களுக்காக ஒதுக்கியிருக்கின்றனர்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கில் இருக்கின்ற மக்களின் உட்கட்டமைப்பு, அபிவிருத்தி, உயிர் இழப்புக்கள், சொத்து அழிவுகள் என்பவற்றிற்கு எந்த வித நிதியும் ஒதுக்கப்படவில்லை என மேலும் தெரிவித்தார்.