வவுனியா, மன்னார் மாவட்டங்களில் மாவீரர் நாள் நினைவேந்தலுக்குத் தடை உத்தரவு!

1531815898 court2 L
1531815898 court2 L

வவுனியா, மன்னார் மாவட்டங்களில் எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர்களை நினைவேந்துவதற்கு நீதிமன்றங்களால் தடை விதிக்கப்பட்டுள்ளன.

பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் கொரோனா தனிமைப்படுத்தல் சட்டம் ஆகியவற்றைக் காரணம் காட்டி இரு மாவட்ட நீதிமன்றங்களிலும் காவல்துறை இன்று விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

“இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

பயங்கரவாத அமைப்பைக் கொண்டாடுவது அல்லது அதற்கு ஆதரவை வெளிப்படுத்தும் நிகழ்வுகளைத் தனியாகவோ, குழுவாகவோ ஒழுங்கமைப்பதும், பங்கேற்பதும் சட்டத்துக்குப் புறம்பானதாகும்.

மாவீரர் நாள் என்பது, தமிழீழ விடுதலைப் புலிகளால் கடைப்பிடிக்கப்பட்ட மரபுகளில் ஒன்று. விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இத்தகைய நிகழ்வுகளை நடத்த அனுமதிக்கப்படாது.

அதேவேளை, கொரோனா தனிமைப்படுத்தல் சட்டம் நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கின்றபோது அதை மீறிப் பொது வெளியில் மக்கள் ஒன்றுகூடி நிகழ்வுகளை நடத்தவும் அனுமதிக்கப்படக்கூடாது” என வவுனியா, மன்னார் பொலிஸார் அந்தந்த மாவட்ட நீதிமன்றங்களில் சமர்ப்பித்துள்ள தடை உத்தரவு கோரிய மனுக்களில் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் குறைவாகக் காணப்படும் வடக்கிலும், கிழக்கிலும் அரச நிகழ்வுகள், அமைச்சர்களின் நிகழ்வுகள் பிரமாண்டமாக நடைபெற்று வரும் நிலையில் தமிழர்களின் உணர்வு, உரிமை சார்ந்த நிகழ்வுகள் கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தைக் காண்பித்து அடக்கப்பட்டு வருகின்றன என்று தமிழ் உணர்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.