தமிழ் பேசும் மக்களின் காணிகளை அபகரித்து சிறுபான்மை தேசிய இனங்களின் மனங்களைப் புண்ணாக்காதீர்- சுரேஷ் க.பிரேமச்சந்திரன்!

பிரேமச்சந்திரன் 1
பிரேமச்சந்திரன் 1

தமிழ் பேசும் மக்களின் நிரந்தர வாழிடங்களான வடக்கையும் கிழக்கையும் நிரந்தரமாகப் பிரிக்கும் நோக்கில் திருகோணமலை மாவட்டத்தின் எல்லையில் உள்ள குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தமிழ் பேசும் மக்களுக்குச் சொந்தமான காணிகளையும் பொதுக்காணிகளையும் அபகரித்து பௌத்த கோயில்களை அமைக்கும் பணியையும் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புற கிராமங்களில் உள்ள காணிகளை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் அபகரித்து மேற்கொள்ள முயற்சிக்கும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களையும் கைவிட்டு சிறுபான்மை தேசிய இனங்களின் மகிழ்ச்சிக்கு வித்திடுமாறு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரது கோரிக்கையின் முழுவிபரம் வருமாறு,

இலங்கை ஜனாதிபதி கௌரவ கோத்தபாய ராஜபக்ச அவர்கள் தனது ஒரு வருட நிறைவு விழாவில் தான் சிங்கள மக்களால் தெரிவு செய்யப்பட்டவராகவும் சிங்கள மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி வருவதாகவும் கூறியுள்ளார். கடந்த ஒருவருட சாதனைகளை அவர் பட்டியலிடும்பொழுது, முதலாவதாக கிழக்கிலங்கையில் சிங்கள பௌத்த புராதனச் சின்னங்களை அடையாளமிடுவதற்கான ஆணைக்குழுவை நான் நியமித்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தின் மேய்ச்சல் தரையை கபளீகரம் செய்து, அதனை சிங்கள விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதேபோல, வடக்கு-கிழக்கின் முக்கியமான பல பகுதிகளை முழுமையாக கபளீகரம் செய்து, அங்கும் சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முல்லைத்தீவின் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, நாயாறு போன்ற பகுதிகளை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையானது இந்த பிரதேசத்தின் நிர்வாகத்தைக் கையேற்பதன் மூலம் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபருக்கோ அல்லது பிரதேச செயலாளருக்கோ எத்தகைய நிர்வாக அதிகாரமும் இல்லாமல் செய்து, அதனை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை கையேற்பதன் ஊடாக அதனை முழுமையான சிங்களக் குடியேற்றத்திற்கு உட்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது தற்காலிகமாக தடைசெய்யப்பட்டிருப்பினும்கூட, அடுத்த கட்டங்களில் என்ன நடக்குமென்று கூறமுடியாது. இதனைப் போன்றே, திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் ஏறத்தாழ ஒன்பது காணித்துண்டுகள் அடையாளம் காணப்பட்டு பௌத்த கோயில்கள் கட்டுவதற்காக அடையாளமிடப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது.

குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தென்னமரவாடி கிராமத்தில் 20.2343 ஹெக்டெயர் நிலப்பரப்பும் அதே பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புல்மோட்டையில் மூன்று வெவ்வேறு இடங்களில் 11ஹெக்டெயர், 7 ஹெக்டெயர், 1ஹெக்டெயர் நிலப்பரப்பு காணிகளும் குச்சவெளி திரியாய் கிராமத்தில் 20ஹெக்டெயர் நிலப்பரப்பும் குச்சவெளி கும்புறுபிட்டி கிழக்கு கலப்பையாறு கிராமத்தில் 20 ஹெக்டெயர் நிலப்பரப்பும் குச்சவெளி புல்மோட்டை 3 பிரதேசத்தில் 6 ஹெக்டெயர் நிலப்பரப்பும் குச்சவெளி புல்மோட்டை 1 பிரதேசத்தில் 13 ஹெக்டெயர் நிலப்பரப்பும் அதே பிரதேசத்தில் மற்றொரு பகுதியில் 19 ஹெக்டெயர் நிலப்பரப்பும் பௌத்த கோயில்கள் கட்டுவதற்காக அரசாங்கம் ஒப்புதலளித்து வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புற கிராமங்களும் திருகோணமலை மாவட்டத்திற்குட்பட்ட குச்சவெளி பிரதேச எல்லைப்புற கிராமங்களும் சிங்கள மயமாக்கப்படுவதற்கான அடிப்படையிலேயே புத்த கோயில்களுக்கான காணிகளை கையகப்படுத்துவதும் முல்லைத்தீவில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின்கீழ் காணிகளை அபகரிப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழ்பேசும் மக்கள் செறிந்துவாழும் குச்சவெளி போன்ற ஒரே பிரதேச செயலகப்பிரிவில் ஒன்பதுக்கும் மேற்பட்ட பௌத்த கோயில்களைக் கட்டுவதற்காக நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளைக் கையகப்படுத்துவதன் நோக்கம் என்ன? சிங்கள மக்களே இல்லாத இத்தகைய பிரதேசத்தில் மிக நெருக்கமான முறையில் பௌத்த கோயில்களைக் கட்டுவதற்கு முயற்சிப்பதும், இதனை ஏற்றுக்கொண்டு அரசாங்கம் காணிகளை வழங்க முன்வருவதும், மிகப் பாரிய அளவிலான சிங்கள பௌத்த விஸ்தரிப்பினை ஏற்படுத்துவதற்கான முயற்சியாகும். இது அந்தப் பிரதேசங்களில் பெரும்பான்மையாக வாழும் சிறுபான்மை தேசிய இனங்களை சிறுபான்மையாக்கும் முன்னெடுப்பாகும்.

இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, திருகோணமலை, போன்ற எல்லைப்புற பிரதேசங்களிலும் வடக்கில் வவுனியா, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களின் எல்லைப்புற பிரதேசங்களிலும் அங்கு வசித்து வந்த தமிழ் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு, பல்லாயிரக்கணக்கான சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டு வந்திருக்கின்றனர்.

இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களும் தமிழ் மக்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றது. வடக்கிலும் கிழக்கிலும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் கடந்த எழுபது வருடங்களாக முற்றுப்பெறாத நிலையில், இந்த புதிய அரசாங்கமானது பௌத்த கோயில்கள் கட்டுவது, பௌத்த புராதன சின்னங்களைப் பராமரிப்பது, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினூடாக காணிகளை நிர்வாகம் செய்வது போன்ற பல திட்டங்களின் கீழ் தமிழ் மக்களின் காணிகளைத் தொடர்ந்து கபளீகரம் செய்துவருவதையே மேற்கண்ட நடவடிக்கைகள் தெளிவுபடுத்தி நிற்கின்றது.

இலங்கை அரசாங்கங்களின் இத்தகைய நடவடிக்கையானது தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களான வடக்கு-கிழக்கின் நிலத்தொடர்ச்சியை இல்லாமல் செய்து வடக்கையும் கிழக்கையும் நிரந்தரமாக இரண்டு பகுதிகளாக மாற்றுவதற்கான முயற்சியே ஆகும். இதனூடாக தமிழ் மக்களின் இருப்பும் அடையாளமும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

நீதிமன்றங்களினூடாக பெற்றுக்கொள்ளப்படும் தற்காலிகத் தடை உத்தரவுகள் என்பது இவற்றுக்கான நிரந்தரத் தீர்வாக அமையாது. வடக்கு-கிழக்கிலிருந்து தெரிவு செய்யப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவை தொடர்பாக காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு அரசாங்கத்தின் இத்தகைய கபடத்தனமான சூழ்ச்சிகளை முறியடித்து, தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்.

சுரேஷ் க.பிரேமச்சந்திரன்
தலைவர்,
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி,
இணைப் பேச்சாளர்,
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி.