மீண்டும் திறக்கப்படும் பாடசாலைகள்- கல்வி அமைச்சு!

செயற்பாடுகள்
செயற்பாடுகள்

கொரோனா அலை இலங்கையில் மீளவும் தீவிரமடைந்ததை அடுத்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு மூடப்பட்டன.

இந்த நிலையில் எதிர்வரும் 23 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படுமென கல்வி அமைச்சர் பீரிஸ் அறிவித்துள்ள நிலையில் பாடசாலைகளின் நடவடிக்கைகள் குறித்து தீர்மானத்தை எட்டுவதற்காக ஒவ்வொரு பாடசாலைகளிலும் குழுவொன்றை நியமிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் தொடர்பில் பாடசாலைகள் எவ்வாறு செயற்பட வேண்டும் என ஒவ்வொரு பாடசாலைகளிலும் ஸ்தாபிக்கப்படும் குறித்த குழு தீர்மானத்தை எட்டும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஒவ்வொரு பாடசாலைகளிலும் அதிபர் தலைமையில் குழுவொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பாடசாலைகள் தொடர்பிலான தீர்மானங்களை எடுக்கும் பொறுப்பு அந்தந்த பாடசாலைகளின் அதிபர் தலைமையிலான குழுவொன்றிற்கு வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த குழுவில் பாடசாலை அதிபர், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, கிராம உத்தியோகத்தர், பாடசாலை அபிவிருத்தி குழுவின் அங்கத்தவர்களில் ஒருவர் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் அங்கத்தவர்களில் ஒருவர் அடங்குவர்.

இவ்வாறு நியமிக்கப்படும் குழுவே, பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் எவ்வாறு முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து தீர்மானத்தை எட்டும்.

இந்த குழுவினால் எட்டப்படும் தீர்மானத்தை வலய கல்விப் பணிப்பாளர் ஆராய்ந்து, இறுதித் தீர்மானத்தை எட்டுவார் எனவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.