நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடை விதிக்க மல்லாகம் நீதிமன்றம் மறுப்பு :சட்ட ஏற்பாடுகளை மீறினால் கைது செய்ய பணிப்பு

unnamed 32
unnamed 32

காவற்துறையினரின் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட சட்ட ஏற்பாடுகளை மீறினால், அவர்களைக் கைது செய்யுமாறு காவற்துறையினருக்கு பணித்த நீதிவான் , நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடைவிதிக்க மறுத்து கட்டளை வழங்கினார்.

நாட்டில் பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் மாவீரர் நாள் நிகழ்வுகளை எதிர்வரும் 27ஆம் திகதி வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் உள்ளபட காங்கேசன்துறை காவற்துறை பிரிவில் நடத்த தடை விதிக்கக் கோரி மல்லாகம் நீதிமன்றில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை காங்கேசன்துறை காவற்துறையினர் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணையை மன்று நேற்றைய தினத்துக்கு திகதியிட்டு ஒத்திவைத்தது. இதனடிப்படையில் மனு மீதான விசாரணை நேற்று, மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் இடம்பெற்றது.

காவற்துறையினரினால் மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்த இலங்கை குற்றவியல் நடபடிக் கோவை 106ஆம் பிரிவின்கீழான சட்ட ஏற்பாடுகளை மீறல் மற்றும் இலங்கை ஜனநாயகச் சோசலிசக் குடியரசினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களில் கூறப்பட்ட தடை செய்யப்பட்ட இயக்கங்களின் சின்னங்கள், கொடிகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தல், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி நிகழ்வுகளை நடத்தினால் மீறுபவர்களை கைது செய்துமன்றில் முற்படுத்துமாறு நீதிவான் கட்டளையில் குறிப்பிட்டார்.

அத்துடன் , பொதுக் கூட்டங்களை நடத்துவதனால் பிரிவின் பிரதேச மருத்துவ அதிகாரியின் அனுமதியுடனயே முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் நீதிவான் உத்தரவிட்டார். எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகளான விஸ்வலிங்கம் திருக்குமரன், வி.மணிவண்ணன் உள்ளிட்ட சட்டத்தரணிகள், இலங்கையின் சட்டதிட்டங்களை மீறமாட்டோம் என வழங்கிய உத்தரவாதத்தின் அடிப்படையிலேயே இந்த கட்டளை வழங்கப்பட்டது.