மாவீரர் வாரத்தை முன்னிட்டு வவுனியாவில் கட்டப்பட்ட சிவப்பு, மஞ்சள் கொடிகளை அகற்றுமாறு காவல்துறையினர் முற்றுகை!

deb396be 66f8 439e ac10 593b80f71ab6
deb396be 66f8 439e ac10 593b80f71ab6

மாவீரர் வாரத்தை முன்னிட்டு சிவப்பு, மஞ்சள் கொடிகளை பறக்கவிட்டு உணர்வு பூர்வமாக நினைவேந்தல் நடவடிக்கை வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவற்றினை அகற்றுமாறு வவுனியா காவல்துறையினர் அவ்விடத்தினை முற்றுகையிட்டுள்ளனர்.

நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக ஆர்ப்பாட்டம் மற்றும் நடை பயணமின்றி சிவப்பு, மஞ்சள் கொடிகளை தனது வீட்டு வாசலில் பறக்கவிட்டு தனது உறவுகளுக்கான நினைவேந்தல் வாரத்தை செ.அரவிந்தன் என்பவர் ஆரம்பித்துள்ளார்.

தனது வீட்டு வாசலின் முன்பகுதியில் கம்பங்களில் சிவப்பு, மஞ்சள் கொடிகளை பறக்க விட்டுள்ள அவர், தனக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற கட்டளையை மீறாத வகையில் இறந்த தனது உறவுகளை தான் நினைவு கூரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று(11.21.2020) இரவு 7.30 மணியளவில் அவ்விடத்திற்கு சென்ற வவுனியா குற்றத்தடுப்பு காவல்துறையினர் அக் கொடிகளை அகற்றுமாறு தெரிவித்ததுடன் நீதிமன்ற கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட முடியாது எனவும் தெரிவித்து கொடிகளை நாட்டிய நபருடன் காவல்துறையினர் தர்க்கத்திலும் ஈடுபட்டனர்.

அதற்கு குறித்த நபர் மறுப்பு தெரிவித்த நிலையில் மேலதிகாரியின் உத்தரவிற்காக அவ்விடத்திலிருந்து அகன்று சென்றுள்ளனர்.

மேலும், இராணுவத்தினரும் அவ்விடத்திற்கு வருகை தந்து கொடிகளை பார்வையிட்ட பின்னர் அங்கிருந்து சென்றனர்.