கிளிநொச்சியில் ஏற்பட்ட கொரோனா தொற்றுநிலை சமூகப்பரவல் இல்லை- வைத்தியர் கேதீஸ்வரன்!

625.500.560.350.160.300.053.800.900.160.90 54
625.500.560.350.160.300.053.800.900.160.90 54

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் கொ​ரோனா தொற்றுள்ள நோயாளி ஒருவர் 23.11.2020 அன்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கிளிநொச்சி மாவட்டத்தை சொந்த இடமாகக் கொண்டவர். 21.11.2020ம் திகதி வெளி நோயாளர் பிரிவிற்கு கொ​ரோனா அறிகுறிகளுடன் வந்த இந்நோயாளி கொ​ரோனா நோய்க்குரிய தனிமைப்படுத்தல் அலகில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் இவருக்குச் செய்த பரிசோதனையின் ஆரம்ப முடிவின்படி டெங்கு நோய் ஏற்பட்டுள்ளதாகக் கருதப்பட்டு இவர் வைத்தியசாலையின் மருத்துவ விடுதியில் உள்ள தனிமைப்படுத்தல் பிரிவிற்கு மாற்றப்பட்டார். அதன்பின் கிடைத்த பீ.சி.ஆர் பரிசோதனையின்படி இவருக்கு கொ​ரோனா தொற்றுள்ளது கண்டறியப்பட்டது. உடனே மீண்டும் வைத்தியசாலையின் கொரோனாக்குரிய தனிமைப்படுத்தல் அலகுக்கு மாற்றப்பட்ட இவர் பின்னர் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு உடனடியாக சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அடையாளம் காணப்பட்ட நோயாளியுடன் நேரடித்தொடர்புடன் மருத்துவ விடுதியில் பணியாற்றிய உத்தியோகத்தர்கள் அனைவரினதும் விபரங்கள் சேகரிக்கப்பட்டு நிபுணர் குழுவின் மூலம் அவர்களுக்கான ஆபத்து நிலைக்கான கனதி ஆராயப்பட்டது. ஆக்குழுவின் பரிந்துரைகளின்படி 14 உத்தியோகத்தர்கள் உடனடியாக சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

அதேவேளை இதே காலப்பகுதியில் உடனடியாக நோய்த் தடுப்பு சுகாதார சேவையைச் சேர்ந்த பொதுச் சுகாதார பரிசோதகரகள், சுகாதார வைத்திய அதிகாரி, மாவட்ட தொற்று நோயியல் வைத்திய அதிகாரி மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரால் இந்நோயாளியுடன் சமூகத்தில் பழகியுள்ளவர்களை தேடியறியும் பணியும் இவருக்குத் தொற்றினை வழங்கியவர்களை கண்டறியும் பணியும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நோயாளியுடன் அவ்விடுதியில் இருந்த நோயாளர்களும் நோயாளர்களைப் பார்வையிட வந்தவர்களும் மற்றும் நோயாளிதனது நோயரும்பு காலத்தில் சமூகத்தில் உலாவிய போது தொடர்பில் இருந்தவர்களும் அடையாளங் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளளனர்.
தொற்று நோயியல் வைத்திய அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கமைய சுயதனிமைப்படுத்தலில் இருந்தவர்களில் தெரிவு செய்யப்பட்ட 217 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டு அதில் ஐவர் நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். மேலும் சில முடிவுகள் கிடைக்க வேண்டியுள்ளது.

புதிதாக தொற்றுள்ளவர்களாக கண்டறியப்பட்டவர்கள் இந்நோயாளியுடன் பணியாற்றிய இருவர் மற்றும் அருகில் இருந்த நிறுவனங்களில் பணியாற்றிய மூவர் ஆகும்.

அருகில் இருந்த நிறுவனங்களில் பணியாற்றிய மூவரும் கொரோனா பரவல் அதிகமாக உள்ள மேல் மற்றும் மத்திய மாகாணங்களுக்கு அண்மையில் பலதடவைகள் சென்று வந்துள்ளமை விசாரணையின் போது தெரியவந்துள்ளது. இவர்கள் முன்னர் முதலாவது நோயாளியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளதால் தொற்று ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது

நோயியலாளர்களின் விதிப்படி இவர்களிடமிருந்தே இத்தொற்று கிளிநொச்சியில் ஆரம்பித்திருக்க வேண்டுமென கருத முடிகின்றது.

ஆகவே கிளிநொச்சியில் ஏற்பட்ட இத்தொற்றுநிலை சமூகப்பரவல் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்று (27.11.2020) மாலை வரை இந்நோயாளியுடனும் ஏனைய ஐவருடனும் தொடர்புள்ள 300 பேர் வரையானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இவர்களுள் 217 பேருக்கு ஏற்கனவே பீ.சி.ஆர். பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.

வடமாகாணத்தில் உள்ள சகல பிரதான வைத்தியசாலைகளிலும் கொரோனா தொற்றுப் பரம்பல் ஆரம்பித்த காலம் முதல் கொரோனா நோய் அறிகுறிகளை ஒத்த அறிகுறிகளுடன் வருபவர்களை வெளிநோயாளர் பிரிவில் வைத்து கண்டறிந்து தனிமைப்படுத்தும் பிரிவிற்கு அனுப்பி பாதுகாப்பான சிகிச்சைகள் வழங்கும் முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வைத்தியசாலையில் கொரோனா தொற்று நோயாளி வந்தாலும் ஏனைய நோயாளிகளுக்கு தொற்று பரவும் வாய்ப்பு இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று நோயாளியென சந்தேகத்திற்குரிய நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க தனியான ஆளணி தினமும் ஒதுக்கப்படுவதுடன் அவர்களுக்கான பாதுகாப்பு அங்கிகளும் வழங்கப்பட்டுள்ளன.

ஆகவே நோயாளிகள் எவரும் வைத்தியசாலைக்கு குறிப்பாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு செல்வதற்கு தயங்க வேண்டியதில்லை. மேலும் கொரோனா தொற்றுநோய் அறிகுறிகளான காய்ச்சல், இருமல், தொண்டை நோ மற்றும் தலையிடி இருப்பின் காலதாமதமின்றி வைத்தியசாலைக்குச் செல்வதன் மூலம் தமக்கு கொரோனா தொற்றுநோய் இல்லையென உறுதிப்படுத்திக்கொள்வதுடன், தொற்று இருந்தால் உடனடியாக வைத்தியசாலையில் பொருத்தமான சிகிச்சை பெறமுடியும் என்பதுடன் தாம் ஒரு சமூகப் பரவலுக்கும் காரணமாக இல்லாமல் இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.