மாகாண சபைத் தேர்தல் நடாத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை:உயர்நீதிமன்றம்.

Supreme Court 1 720x450 2
Supreme Court 1 720x450 2

உயர்நீதிமன்றத்தின் ஐவர் கொண்ட நீதிபதிக் குழாமின் ஏகமனதான கருத்தாக, மீளாய்வுக் குழு அறிக்கையில்லாமல், திருத்தச்சட்டத்தின் சரத்துகளுக்கமைய ஜனாதிபதியால் தேர்தலை நடாத்துவதற்கான எல்லை நிர்ணயக் குழுவால் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ள அறிக்கையின் எல்லை நிர்ணயங்களை பிரகடனப்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்றும் அதனால் மாகாண சபை (திருத்தம்) சட்டத்தின் கீழ் தேர்தலை நடாத்த முடியாதென்றும் அர்த்த விளக்க கட்டளைச் சட்டத்தின் சரத்துகளுக்கமைய குறித்த திருத்தச் சட்டத்திற்கு முன்னர் அமுலிலிருந்த சட்டத்தின் கீழும் தேர்தலை நடாத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான உயர் நீதிமன்றின் விளக்கம் நேற்று ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவ் அறிக்கையின் முழு வடிவம்.

தற்போது உத்தியோகபூர்வ ஆட்சிக்காலம் நிறைவடைந்துள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல் நடாத்தும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக தாமதமடைந்து வரும் காரணத்தினால் அரசியலமைப்பு சட்டத்தினூடாக உறுதி செய்யப்பட்டுள்ள மக்களின் வாக்குரிமை மீறப்பட்டுள்ளது. அதன் காரணத்தினால் துரிதமாக மாகாண சபைத் தேர்தலை நடாத்துவது தொடர்பில் கௌரவ ஜனாதிபதி அவர்கள் கவனம் செலுத்தியுள்ளார்.

2017, 17ஆம் இலக்க சட்டத்திற்கமைய கெளரவ ஜனாதிபதி அவர்களால் இலங்கை மக்கள் சமூகத்தின் பன்முகத்தன்மை,தொழில் மற்றும் சமூக பன்முகத்தன்மைகள் உள்ளடங்கும் வகையில் ஐவர் கொண்ட எல்லை நிர்ணயக் குழுவொன்றை 2017 ஒக்டோபர் மாதம் நியமித்தார்.

அந்தக் குழுவினால் சட்டமூலத்தின் சரத்துகளுக்கமைய மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட போதும் அதற்கான பாராளுமன்ற அங்கீகாரம் வழங்கப்படவில்லை.

அதன் காரணத்தினால் சட்டத்திற்கமைய சபாநாயகரால் 2018.08.28 ஆம் திகதி பிரதமர் தலைமையில் மீளாய்வுக் குழுவொன்று நியமிக்கப்பட்டதுடன், அக்குழுவினால் எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை மேற்கொண்டதன் பின்னர் அந்த அறிக்கையை ஜனாதிபதி அவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது.

மேற்குறிப்பிட்ட மீளாய்வுக் குழு அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர் ஜனாதிபதி அவர்களால் அறிக்கையொன்றினூடாக உடன் அமுலுக்கு வரும் வகையில் தேர்தல் பிரிவுகளின் புதிய இலக்கங்கள், எல்லை மற்றும் மீளாய்வு குழு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தேர்தல் தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பெயர்களை பிரகடனப்படுத்தியதன் பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடாத்த வேண்டும்.

ஆனாலும் மீளாய்வுக் குழு தனது கடமையை சரிவர ஆற்றாததன் காரணத்தினால் ஆட்சிக் காலம் நிறைவடைந்துள்ள மாகாண சபைகளில் தேர்தல் நடாத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாமையினால் மக்களுக்கு தேர்தல் அதிகாரத்தை வழங்கும் நோக்கில் அமுலிலிருக்கும் சட்டத்தின் பிரகாரம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்டு உயர்நீதிமன்றத்தின் கருத்தை ஆலோசிப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் முடிவு செய்தார்.

அதற்கமைய மீளாய்வுக்குழு அறிக்கையை ஜனாதிபதி அவர்களிடம் சட்டபூர்வமாக சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால் தற்போது எல்லை நிர்ணயக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு விசேட அறிக்கையை தேர்தல் பிரிவுகளின் இலக்கங்கள், எல்லை மற்றும் தேர்தல் பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் பெயர்களை பிரகடனப்படுத்துவதன் ஊடாக மேற்குறிப்பிட்ட சட்டமூலத்தின் சரத்துகளுக்கமைய மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கான சாத்தியங்கள் மற்றும் குறித்த திருத்தச்சட்டத்தின் கீழ் தேர்தலை நடாத்த முடியாவிட்டால் அந்த திருத்தத்திற்கு முன் அமுலிலிருந்த சட்டத்தின்கீழ் மாகாண சபைகளை நடாத்தும் சாத்தியங்கள் தொடர்பில் அரசியல் அமைப்பின் 129 (1) சட்டத்தின் கீழ் உயர்நீதிமன்றத்தின் கருத்தே வினவப்பட்டது.

அதற்கமைய 2019.08.29ஆம் திகதிய கடிதத்தின் மூலம் மதிப்பிற்குரிய உயர்நீதிமன்றத்தின் ஐவர் கொண்ட நீதிபதிக் குழாம் அவர்களது ஏகமனதான கருத்தாக, மீளாய்வுக் குழு அறிக்கையில்லாமல், திருத்தச்சட்டத்தின் சரத்துகளுக்கமைய கௌரவ ஜனாதிபதி அவர்களால் தேர்தலை நடாத்துவதற்கான எல்லை நிர்ணயக் குழுவால் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ள அறிக்கையின் எல்லை நிர்ணயங்களை பிரகடனப்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதி அவர்கள் வசம் இல்லை என்றும் அதன் காரணத்தினால் மாகாண சபை (திருத்தம்) சட்டத்தின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடாத்த முடியாதென்றும் அர்த்த விளக்க கட்டளைச் சட்டத்தின் சரத்துகளுக்கமைய குறித்த திருத்தச் சட்டத்திற்கு முன்னர் அமுலிலிருந்த சட்டத்தின் கீழும் தேர்தலை நடாத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதய ஆர்.செனெவிரத்ன,
ஜனாதிபதியின் செயலாளர்.
2019.09.02