சு.கவின் புதிய யோசனைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியது சஜித் அணி!

மாகாண சபை தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள யோசனைக்குப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறும் வரை பழைய மாகாண சபைகளை ஸ்தாபித்து முன்னாள் உறுப்பினர்களை இயங்கு நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்ற யோசனையை அரசிடம் முன்வைப்பதற்கு சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

சு.கவின் இந்த யோசனை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு என்னவென்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்னவிடம் வினவியபோது அவர் கூறியவை வருமாறு:-

தேர்தல் என்பது அரசியல்வாதிகளுக்குப் பதவிகளை வழங்குவதற்காக நடத்தப்படுவது அல்ல. மாறாக மக்களின் ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்தி, மக்களின் இறைமைக்காகவே அது நடத்தப்படுகின்றது. எனவே, தேர்தலை எந்நேரமும் எதிர்கொள்வதற்கு நாம் தயார். ஆனால், தேர்தல் என்ற போர்வையில் பதவிகளை வழங்கும் திட்டத்தை ஏற்கத் தயாரில்லை – என்றார்.