மட்டக்களப்பு மாவட்டத்தில், பிரதான நான்கு பிரதேச சபைகளின் தவிசாளர்கள் தமது அதிகாரங்களை பயன்படுத்த முடியாது-கிழக்கு மாகாண ஆளுநர்!

download 11
download 11

மட்டக்களப்பு மாவட்டத்தில், பிரதான நான்கு பிரதேச சபைகளின் தவிசாளர்களுக்கு தமது அதிகாரங்களை பயன்படுத்த முடியாது என கிழக்கு மாகாண ஆளுநரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநரின் ஆலோசனைக்கு அமைவாக, கிழக்கு மாகாண உதவி உள்ளுராட்சி உதவி ஆணையாளரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும், கடந்த 4 ஆம் மற்றும் 5 ஆம் திகதிகளில் ஆளுநருடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி,  ஏறாவூர் நகர சபை, மண்முனைப்பற்று, வாகரை மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேச சபைகளின் தவிசாளர்களுக்கே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சபைகளில் 2021 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தினை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட சிக்கல் நிலைமை மற்றும் ஏனைய முறைப்பாடுகள் காரணமாக விசாரணைகள் முன்னெடுக்கபடவுள்ளன.

இதற்கான வர்த்தமானி வெளியிடப்படும் வரையில், குறித்த பிரதேச சபைகளின் அமர்வுகளை நடாத்தாமல் இருப்பதுடன், தவிசாளர்கள் தங்களின் அதிகாரங்களை பயன்படுத்துவதில் இருந்து தவிர்ந்து செயற்படுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மூலதன வேலைத்திட்டங்களையோ அல்லது இலவச விநியோகங்களையோ மேற்கொள்ளாதிருப்பதனை உறுதிப்படுத்துமாறும் குறித்த அறிக்கையின் ஊடாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, வெலிகந்த மற்றும் ரம்பேவ ஆகிய பிரதேச சபைகளின் தவிசாளர்களின் அதிகாரங்கள் வடமத்திய மாகாண ஆளுநரினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த பிரதேச சபைகளின் தவிசாளர்களுக்கு எதிரான விசாரணைகள் நிறைவடையும் வரையில், இவ்வாறு அதிகாரங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.