சுகாதார விதிமுறைகளை மீறும் அலுவலகங்களுக்கு இனி ஆப்பு – காவற்துறையினர் விசேட நடவடிக்கை

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் நிலைமை தொடரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் பொது இடங்கள், நிறுவனங்கள் மற்றும் வர்த்க நிலையங்களில் சுகாதார ஒழுங்கு விதிகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்பதனை ஆராய்வதற்காக விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று காவற்துறை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அதற்கமைய இன்று முதல் மேல் மாகாணத்தில் சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து காவற்துறையினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலுவலகங்களுக்கு வருகை தரும் அனைத்து நபர்களின் பதிவையும் பராமரிப்பது கட்டாயமாகும் என்றும், கைகளைக் கழுவுவதற்கான வசதிகளை வழங்குதல், வெப்பநிலையைச் சரி பார்த்தல், தொழிலாளர்களுக்கான வளாகத்தில் சமூக இடைவெளியைப் பேணுதல் போன்றவற்றை உறுதி செய்தல் வேண்டும் என்றும் காவற்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

மேலும் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றும், சட்டதிட்டங்களை மீறும் அலுவலகங்கள் மற்றும் நபர்களுக்கு எதிராகத் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவற்துறை பேச்சாளர் மேலும் கூறினார்.