தைத்திருநாள் மகிமை பொருந்திய நாளாகும் -பிரதமரின் வாழ்த்து செய்தி

Mahintha 720x450 1

உலகம் முழுவதுமுள்ள தமிழ் மக்கள் தை மாதத்தில் கொண்டாடும் தைத்திருநாள் மத, கலாசார மற்றும் சமூக ரீதியாக மிகவும் முக்கியமான மகிமை பொருந்திய நாளாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவரது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களினால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் தலைசிறந்ததாகவும் உயர்வானதாகவும் தைப்பொங்கல் பண்டிகை போற்றப்படுகின்றது.

தமது உழைப்புக்கு உதவிய இயற்கைக்கு நன்றியுணர்வினை தெரிவிக்கும் திருநாளாக தைப்பொங்கல் விளங்குகின்றது.

இந்த தைப்பொங்கல் திருநாளில் உழவர்கள் தமது வேளான்மைக்கு உதவி செய்த சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துகின்றனர்.

உழவர்கள் மாத்திரமல்லாமல் ஒவ்வொரு மனிதப்பிறவியும் சூரியனுக்கு நன்றி கூறும் நாளாக இன்றைய நாள் போற்றப்படுகிறது.

இலங்கையர்களாகிய நாம் அனைவரும் இனம், மதம், மொழி ஆகியவற்றினால் வேறு பட்டிருந்தாலும் கூட எங்கள் அனைவரினதும் எண்ணங்களும் எதிர்பார்ப்புக்களும் ஒன்றாகும்.

நாட்டைக் கட்டியெழுப்பும் ‘சுபீட்சத்தின் நோக்கு’ என்ற உன்னத இலட்சியத்துடன் இலங்கை மக்களது வாழ்க்கையை முன்னேற்றிச் செல்லும் வகையில் இந்த தருணம் அமைந்துள்ளது.

இலங்கை மற்றும் உலகெங்குமுள்ள தமிழர்கள் உவகையுடன் கொண்டாடும் பொங்கல் திருநாளானது மகிழ்ச்சிகரமாக, நன்றி செலுத்துகின்ற, மற்றும் மீளமைப்பிற்கான மக்கள் திருநாளாக அமைந்து, அனைவரும் ஒன்றுபட்டு எதிர்கால இலங்கையின் சமாதானத்திற்காக உறுதிபூணும் ஒர் தேசிய நல்லிணக்க தினமாக அமைவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.