சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு கொரோனா தடையல்ல : 7630 படைவீரர்கள் பங்குபற்றுவர் – கமல் குணரத்ன

Defence Ministry Secretary Rtd Major Kamal Gunaratne
Defence Ministry Secretary Rtd Major Kamal Gunaratne

உலகம் முழுதும் கொவிட் தொற்றுக்கு முகங்கொடுத்துள்ள போதிலும் ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 4 ஆம் திகதி கொண்டாடப்படுவதைப் போன்று வழமையைப் போன்று கம்பீரம் குறையாதவாறு அதேவேளை கடுமையான சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய இம்முறையும் 73 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெறும்.

அதற்கான அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

இம்முறை சுதந்திர தின மரியாதை அணி வகுப்பில் இராணுவம், கடற்படை,விமானப்படை,காவற்துறை , விசேட அதிரடிப்படை, சிவில் பாதுகாப்புபடை, மற்றும் தேசிய மாணவர் படையணி என்பவற்றின் சார்பில் 7630 படைவீரர்கள் பங்குபற்றவுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.

இலங்கையின் 73 ஆவது சுதந்திரதின கொண்டாட்டங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் விசேட கலந்துரையாடலொன்று 18 ஆம் திங்கட்கிழமை ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

இதில் கலந்து கொண்ட போது இதனைக் கூறிய பாதுகாப்பு செயலாளர் அங்கு மேலும் தெரிவிக்கையில் ,

கடந்த வருடத்தைப் போன்று சுதந்திர சதுக்கத்தில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் இடம்பெறும். ஜனாதிபதி கோட்டாபய ராபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜிபக்ஷ , அமைச்சர்கள் , இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் வெளிநாட்டு விசேட பிரதிநிதிகள் நிகழ்வின் பிரதம பங்பற்றாளர்களாக இருப்பார்கள்.

சுதந்திர தின அணிவகுப்புக்கள் மற்றும் கலாசார நிகழ்வுகளில் கலந்து கொள்கின்ற அனைவருக்கும் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும்.

சுதந்திர தினத்திற்கு முன்னர் நடைபெறும் மத வழிபாடுகள் பெப்ரவரி 2 ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகும். பெப்ரவரி 3 ஆம் திகதி மருதானை விகாரையில் தான நிகழ்வு இடம்பெறும். ஏனைய சர்வ மத வழிபாடுகள் சுதந்திர தினத்தன்று நடைபெறும்.

அதற்கமைய பௌத்த மத வழிபாடுகள் காலை 6.30 க்கு நாரஹேன்பிட்டியவிலுள்ள அபயராம விகாரையிலும் , இந்து மத வழிபாடுகள் பம்பலபிட்டி புதிய கதிரேசன் ஆலயத்திலும் , 6.35 க்கு இஸ்லாம் மத வழிபாடுகள் கொழும்பு-4 நிமல்பாதை மஜ்மாயில் கமிராத் ஜூம்மா பள்ளிவாசலிலும் , 7.15 க்கு கிருஸ்தவ வழிபாடுகள் பொரளை தேவாலயத்திலும் நடைபெறும்.

அதனையடுத்து முப்படையினரின் மரியாதை அணிவகுப்பு நடைபெறும். இதில் 3171 இராணுவத்தினரும் , 808 கடற்படையினரும் , 997 விமானப்படையினரும் , 664 காவற்துறையினரும், 432 விசேட அதிரடிப்படையினரும் , 558 சிவில் பாதுகாப்புபடையினரும் , 336 தேசிய மாணவர் படையணி பங்குபற்றுவார்கள். இதனைத் தொடர்ந்து கலாசார அணி வகுப்பு இடம்பெறும்.

இதில் முப்படை, சிவில் பாதுகாப்புபடை, காவற்துறை தேசிய இளைஞர் பாதுகாப்புபடை மற்றும் மாகாணசபை கலாசாரசபையை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடகக் கலைஞர்கள் உள்ளிட்ட 341 பேர் பங்குபற்றுவார்கள். இம்மாதம் 29, 30, 31 ஆம் திகதிகளிலும் பெப்ரவரி 1, 2, 3 ஆம் திகதிகளிலும் சுதந்திர சதுக்கத்தில் ஒத்திகைகள் இடம்பெறும்.

அத்தோடு சுதந்திர தினத்தின்று இடம்பெறும் முக்கிய நிகழ்வாக டீ.எஸ்.சேனாநாயக்கவின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தும் வைபவம் காலை 7.15 மணிக்கு முன்னாள் சபாநாயகர் கருஜயசூரியவின் பங்குபற்றலுடன் நடைபெறும்.

பெப்ரவரி முதலாம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை சகல அரச திணைக்களங்களிலும் நிறுவனங்களிலும் தேசிய கொடி பறக்கவிடப்படுவதோடு 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் மின்விளக்கு அலங்காரங்களையும் செய்ய முடியும்.

இவ்வாறு எந்தவிதமான நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டாலும் குறைந்தளவானோரின் பங்குபற்றலுடன் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமையவே முன்னெடுக்கப்படும் என்றார்.