புனானை சிகிச்சை மையத்திலிருந்து கொரோனா தொற்றாளர் ஒருவர் தப்பியோட்டம்!

Thappiyottam
Thappiyottam

புனானை சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த கொவிட்-19 நோயாளர் ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.என காவல்துறை ஊடகப் பேச்சாளரும்; பிரதி காவல்துறைமா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மீதொட்டமுல்ல பகுதியை சேர்நத 43 வயதான ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் அவரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் 669 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

அவர்களில் 660 பேர் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.

ஏனைய 9 பேரும் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 54 ஆயிரத்து 419 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் பேலியகொடை, திவுலபிட்டி, சிறைச்சாலை ஆகிய முக்கொத்தணிகளில் இதுவரை 50 ஆயிரத்து 561 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

அதேநேரம் 7 ஆயிரத்து 555 கொவிட் 19 நோயாளர்கள் நாட்டில் உள்ள கொவிட் 19 சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்தை கடந்துள்ளது.

நேற்று மேலும் 774 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து சிகிச்சை நிலையங்களில் இருந்து வெளியேறியதற்கு அமைய இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதன்படி நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 46 ஆயிரத்து 594 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, வவுனியா- பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த 20 பேருக்கு நேற்றைய தினம் கொவிட்-19 தொற்றுறுதியானது.

வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

வவுனியா- பட்டாணிசூர் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனைகளின் ஒரு கட்டமாக இந்த விபரம் வெளியாகியுள்ளது.

இதற்கமைய வவுனியாவில் இதுவரை 222 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

அத்துடன் யாழ்ப்பாணம் மாநகர பொதுச் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த நிலையில் சுயதனிமைப்படுத்தலில் இருந்த அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.