சீரற்ற காலநிலை – 3 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

red alert
red alert

இரத்தினபுரி, பதுளை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு மண் சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக தேசிய கட்டட ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் சில இடங்களில் மண் மேடு இடிந்து விழுந்தமையால் சில வீதிகளில் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை என்ற இடத்தில் மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 7.30 மணிக்கு வலப்பனை பிரதேசத்தில் பெய்த கடும் மழையின் காரணமாக வலப்பனை – கண்டி பிரதான வீதியில் முன்வத்த என்ற இடத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் வீதிக்கு கீழ்புறமாக உள்ள வீட்டில் மண் மேடு சரிந்து விழுந்துள்ளது.

இதில் அடுத்த வருடம் உயர்தர பரீட்சை எழுதும் மாணவர் ஒருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இம் மாணவரின் பாட்டி மற்றும் தாத்தாவின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், 2 பேர் காணமால் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு 643 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.