கட்சி விதிகளை மீறியவர்களுக்கு எதிராக நடவடிக்கை

thurairasasingam
thurairasasingam

கட்சியின் ஒழுக்க விதிகளை மீறி செயற்பட்டவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரில் இருந்து கொண்டே கட்சிக்கு எதிராகச் செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் உட்பட உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் எழுவர் மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அங்கத்தவர் ஒருவருக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  1. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன்
  2. யாழ்ப்பாணம் நெடுந்தீவுப் பிரதேச சபைத் தவிசாளரான பிலிப் பற்றிக் ரோசான்
  3. மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்களான இரா.அசோக், யூசைமுத்து பிலிப்
  4. மண்முனைப் பற்றுப் பிரதேச சபையின் உறுப்பினர் தோமஸ் சுரேந்தர்
  5. ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினர்களான வ.சந்திரவர்ணன், சி.சிவானந்தன்
  6. திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை உறுப்பினர் கந்தசாமி கோணேஸ்வரநாதன்
  7. அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினரான குஞ்சித்தம்பி ஏகாம்பரநாதன்

இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதற்காக அவர்கள் சார்ந்த கட்சித் தலைமையின் நடவடிக்கை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைக்குரிய கடிதங்கள் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர்களது பதில்களுக்கு அமைய அவர்களது பாராளுமன்ற பிரதிநிதித்துவம் மற்றும் உள்ளுராட்சி மன்றப் பிரதிநித்துவங்களும் இழக்கச் செய்து அவர்களின் வெற்றிடத்திற்காகப் புதியவர்கள் நியமனம் செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல பிரச்சாரங்களின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இணைந்து கொண்ட கோரளைப்பற்று வடக்குப் பிரதேச சபை உறுப்பினர் பா.முரளிதரன் அவர்களின் உள்ளுராட்சி மன்றப் பிரதிநிதித்துவமும் இழக்கச் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேற்படி நடவடிக்கைகள் உரிய பிரதிநிதிகளின் கட்சித் தலைமைகளின் ஆலோசனைகள் மற்றும் முடிவுகளின் அடிப்படையிலும், கடந்த வாரம் இடம்பெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அரசியற்குழுவில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமையவுமே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.