ஒரு இலட்சம் கோடி பண விவகாரம்; 6 பேர் கைது

19 1513669670 borrow money
19 1513669670 borrow money

ஒரு இலட்சம் கோடி வெளிநாட்டு பணவிவகாரம் தொடர்பாக வவுனியா காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய ஆறு பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வவுனியாவை சேர்ந்த இளைஞர் ஒருவரிற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய சிலர் தாம் மத்திய வங்கியில் இருந்து கதைப்பதாக தெரிவித்ததுடன், அவரது வங்கிக்கணக்கில் பத்தாயிரம் கோடி ரூபாய் பணம் அமெரிக்க நாட்டிலிருந்து வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், அதனை வெளியில் எடுப்பதற்கு உதவி செய்வதாகவும் தெரிவித்து, 7500 கோடியை தங்களுக்கு தருமாறும் 2500 கோடியை குறித்த இளைஞருக்கு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர். 

குறித்த விடயம் தொடர்பாக அந்த இளைஞரும் கடந்த வருடம் 6 ஆம் மாதத்திலிருந்து அந்த குழுவினருடன் இணைந்து கொழும்பில் தங்கிவந்துள்ளார். இதேவேளை கொழும்பில் வைத்து அவரது வங்கிகணக்கில் ஒரு இலட்சம்கோடி மதிப்பிலான இலங்கைரூபாய் வங்கி கணக்கில் வைப்பில் இடப்பட்டுள்ளதாக அந்த குழு இளைஞரிடம் தெரிவித்துள்ளது. எனினும் பணம் எடுக்கமுடியாத நிலையில் மீண்டும் அவர் வவுனியாவிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றையதினம் குறித்த இளைஞரை மீண்டும் தொடர்புகொண்ட அந்த குழுவினர் பணத்தை மீட்பதற்காக கொழும்பு செல்வதாக தெரிவித்து அவரை வாகனம் ஒன்றில் ஏற்றி அழைத்துச்சென்றுள்ளனர். குறித்த இளைஞர் அவர்களுடன் செல்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இளைஞனின் நண்பன் வழங்கிய தகவலிற்கமைய வவுனியா குற்றத்தடுப்பு காவல்துறையினருக்கு குறித்த விடயம் தெரியப்படுத்தப்பட்டது.காவல்துறையினர் அந்த குழுவினரை கைதுசெய்தனர். 

இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் வவுனியா குற்றத்தடுப்பு காவல்துறையினர் குறித்த இளைஞனிடம் வாக்குமூலத்தை பெற்றுள்ளதுடன், இது தொடர்பாக மத்திய வங்கிக்கும் தெரியப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கைதுசெய்யப்பட்ட 6 நபர்களும் கொழும்பு, அவிசாவளை, குருநாகல், மற்றும் வவுனியா போன்ற பகுதிகளை வசிப்பிடமாக கொண்டுள்ளதுடன், அவர்கள் பயன்படுத்திய மூன்று சொகுசு வாகனங்களும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர் அவர்களுடன் செல்வதற்கு மறுப்பு தெரிவித்தால் அவரை கடத்திச்செல்லும் நோக்குடன் அந்த குழு  வந்திருக்கலாம் என காவல்துறையினர் தரப்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது