இலங்கையின் பிரதான கட்சியொன்றை விலைக்கு வாங்கும் முயற்சியில் பா.ஜ.க. – தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் சந்தேகம்

20663689 1921211861493905 3098304028678389391 n e1613548738801
20663689 1921211861493905 3098304028678389391 n e1613548738801

இலங்கையில் பாரதிய ஜனாதா கட்சி ஆட்சி அமைக்கும் திட்டம் தவறுதலாகக் கூறப்பட்ட விடயமொன்றல்ல என்றும், அவர்கள் இலங்கையில் உள்ள பிரதான கட்சியொன்றைக் கொள்வனவு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர் என்றும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் வசந்த பண்டார தெரிவித்தார்.

பாரதிய ஜனதா கட்சி தொண்டமானின் மகனைக் கொண்டு இலங்கையில் கட்சி அமைப்பதைப் பற்றிக் கூறவில்லை என்றும், அவர்கள் பிரதான கட்சியொன்றை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனைய விடயத்தில் தோல்வியடைந்த இந்தியா, தமது கட்சியொன்றை இலங்கையில் ஆட்சிப்பீடம் ஏற்றுவதன் மூலமே இந்த நிலைமையை மாற்றியமைக்கலாம் என்று சிந்திக்க ஆரம்பித்துள்ளது.

இலங்கையில் ஒவ்வொரு அரசுக்கும் திட்டங்களை வழங்கி, தனிநபர்களை விலைக்கு வாங்கி, செல்வாக்குச் செலுத்தி வந்த இந்தியா, இனியும் அதனைத் தொடர முடியாதென்பதை உணர்ந்துள்ளது.

இலங்கையின் ஜனாதிபதி உட்பட அரசு கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்க முன்வந்த நிலையில், அரசை ஆட்சியில் அமர்த்தியவர்களின் எதிர்ப்பால் குறித்த தீர்மானம் கைவிடப்பட்டது.

இதுபோன்ற நிலைமைகளுக்கு இந்தியா தொடர்ந்தும் முகங்கொடுக்க நேரிடும் என்பதால், இலங்கையின் பிரதான அரசியல் கட்சியொன்றை விலைக்கு வாங்கும் முயற்சியில் அது ஈடுபட்டுள்ளது – என்றார்.