“எழுக தமிழ்” சாத்வீக ரீதியான போராட்ட தத்துவத்தின் அடிப்படையில் மிகவும் முக்கியமானது: விக்கி.

z p11 Wigneswaran 01
z p11 Wigneswaran 01

சமூகத்தில் மகத்தான மருத்துவ சேவை ஆற்றும் பிரபல்யமான மருத்துவர்கள்,மீன்பிடிசமாசங்கள், வர்த்தக சம்மேளனங்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என்று எமது சமூகத்தின் எல்லா மட்ட மக்களும் இந்தப் போராட்டத்தை ஒற்றுமையாக மேற்கொண்டு “நாங்கள் வீழ்ந்து விடவில்லை. நாம் விழ விழ மீண்டும் மீண்டும் எழுவோம்”என்று கிளர்ந்து எழுந்திருந்தார்கள். இது சாத்வீக ரீதியான போராட்ட தத்துவத்தின் அடிப்படையில் மிகவும் முக்கியமானது என்று நான் கருதுகின்றேன்.

நேற்றைய முன்தினம் IBC தொலைக்காட்சி நிகழ்வொன்றில் பங்குபற்றிய நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனிடம் IBC தொலைக்காட்சியினால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்காக அவர் அளித்த
பதிகளும்.

IBC கேள்விகள் – (03.09.2019)

  1. கேள்வி: கடந்த முறை ஒழுங்கு செய்யப்பட்ட எழுக தமிழ் நிகழ்வின் மூலம் ஏற்பட்ட நன்மை என்ன? இதனால் ஏற்பட்ட தாக்கம் என்ன?

பதில்: தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் இயக்கமாக ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட முதலாவது பெரும் நிகழ்வாக 2016 ஆம் ஆண்டு எழுக தமிழ் நிகழ்வை செய்திருந்தோம். அப்போதைய கால கட்டத்தில் பல்வேறு அடக்கு முறைகளுக்கு முகம் கொடுத்திருந்தவேளை பல்லாயிரக்கணக்கான எமது வடக்கு – கிழக்கு மக்கள் அணிதிரண்டு மேற்கொண்ட போராட்டமாக இது அமைந்திருந்தது.

யுத்தம் முடிவடைந்து தோல்வி மனப்பான்மை, அச்சம் ஆகியவற்றினால் எமது மக்கள் துவண்டு போயிருந்த நிலையிலும் இந்த நிலைமையை பயன்படுத்தி எமது மக்கள் மீது அரை குறை தீர்வு ஒன்றை திணிப்பதற்கு பல்வேறு சக்திகளும் கங்கணம் கட்டி நின்ற வேளை எமது மக்கள் அடக்கு முறைகளுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்து தமது உரிமைகளையும் நீதியையும் வலியுறுத்தி மேற்கொண்ட போராட்டம் என்ற வகையில் மிகவும் முக்கியத்துவம் மிக்க நிகழ்வாக இந்த நிகழ்வை பார்க்கின்றேன்.

இது சிங்கள அதிகார வர்க்கத்துக்கும், சர்வதேச சமூகத்துக்கும் மிகவும் தெளிவான ஒரு செய்தியை சொல்லி இருந்தது. அதாவது, தமது உரிமைகளும் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியும் கிடைக்கும் வரை ஓயப்போவதில்லை என்ற செய்தியையும் எவரும் தம்மை இலகுவில் ஏமாற்றி அரை குறை தீர்வு ஒன்றை திணிப்பதற்கு இடமளிக்கப்போவதில்லை என்ற செய்தியையும் சொல்லி இருந்தார்கள்.

அத்துடன் அரசியல் கட்சிகளும் வெகுஜன அமைப்புக்களும் ஒன்று சேர்ந்து ஒருங்கிணைந்து மேற்கொண்ட இந்த நிகழ்வு யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தில் ஒரு பெரும் நம்பிக்கையை தமிழ் மக்கள் மத்தியில் ஊட்டுவதாக அமைந்திருந்தது.

சமூகத்தில் மகத்தான மருத்துவ சேவை ஆற்றும் பிரபல்யமான மருத்துவர்கள்,மீன்பிடிசமாசங்கள், வர்த்தக சம்மேளனங்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என்று எமது சமூகத்தின் எல்லா மட்ட மக்களும் இந்தப் போராட்டத்தை ஒற்றுமையாக மேற்கொண்டு “நாங்கள் வீழ்ந்து விடவில்லை. நாம் விழ விழ மீண்டும் மீண்டும் எழுவோம்”என்று கிளர்ந்து எழுந்திருந்தார்கள். இது சாத்வீக ரீதியான போராட்ட தத்துவத்தின் அடிப்படையில் மிகவும் முக்கியமானது என்று நான் கருதுகின்றேன்.

கடந்த முறை நாம் நடத்திய “எழுக தமிழ்” நிகழ்வு தென் இலங்கை ஊடகங்களிலும் இலங்கை பாராளுமன்றத்திலும் முக்கியமான பேசு பொருளாக இருந்தமையை நீங்கள் அறிவீர்கள். தமிழ் மக்கள் வீழ்ந்துவிட்டார்கள் இனி மீளவும் எழமாட்டார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த சிங்கள பேரினவாதத்தின் சிந்தனையில் ஒரு தாக்கத்தை இது நிச்சயமாக ஏற்படுத்தி இருக்கும் என்று நான் நம்புகின்றேன்.

02. கேள்வி: தற்போது நீங்கள் மேற்கொண்டுவரும் “எழுக தமிழ்” நிகழ்வு ஏன் அவசியம்?

பதில்: நான் ஏற்கனவே கூறிய காரணங்களின் அடிப்படையில் தற்போது நாம் ஒழுங்கு செய்துவரும் “எழுக தமிழ்” நிகழ்வு அவசியமானதாக இருக்கின்றது. அரசியல், சமூக மற்றும் பொருளாதார ரீதியாகத் தமிழ் மக்கள் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் இன்று நின்றுகொண்டிருக்கின்றார்கள். தமிழ் மக்களின் இருப்பை வடக்கு கிழக்கில் இல்லாமல் செய்யும்பொருட்டு அரசாங்கத்தின் திட்டமிட்ட நில அபகரிப்பு நடவடிக்கைகளும், சிங்களக் குடியேற்றங்களும், பௌத்தமயமாக்கலும் முன்னெப்போதையும் விட அதிகரித்துள்ளன.

10 வருடங்கள் ஆகியுள்ளபோதிலும் இனப்படுகொலைக்கு உட்படுத்தப்பட்ட எமது மக்களுக்கு எந்த நீதியோ தீர்வோ வழங்கப்படவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் அரசியல் கட்சிகளையும் மக்களையும் சரியான பாதையில் நெறிப்படுத்தி போராட்ட பாதையைச் செம்மைப்படுத்துவதற்கு சிவில் சமூகம் மிகவும் காத்திரமான ஒரு வகிபாகத்தை மேற்கொள்ளவேண்டி இருக்கின்றது. சிவில் சமூகம் என்பது மக்களை பிரதிபலிப்பது. சத்தம் இன்றி எமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் யுத்தத்துக்கு எதிராக எமது மக்களின் எதிர்ப்புக்களை வலுவூட்டுவதற்கும் எமது இந்த துன்பங்களை தொலை தூரத்தில் இருக்கும் எமது சக பூகோள பிரஜைகளுக்கும் அதிகார மையங்களுக்கும் கொண்டுசென்று இந்த அநியாயங்களுக்கு எதிராக அவர்களை நடவடிக்கை எடுக்கத் தூண்டுவதற்குமான நடவடிக்கைகளை நாம் செய்யவேண்டும்.

எமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் அநியாயங்கள் மற்றும் அட்டூழியங்களை நாம் வெளி உலகத்துக்கு எவ்வளவுக்கு எவ்வளவு வெளிப்படுத்துகிறோமோ எவ்வளவுக்கு எவ்வளவு யதார்த்தநிலையை அவர்களுக்கு எடுத்துக்கூறுகின்றோமோ எவ்வளவுக்கு எவ்வளவு எமது வலிகளை அவர்களின் வலிகளாக உணரும்படி செயற்படுகின்றோமோ அப்பொழுதுதான் ஏனையசமூகங்களை நாம் எம்மை நோக்கிக் கவனம் செலுத்த வைக்கவும் எமக்காக செயற்படவும் செய்யவும் முடியும்.

எமது துன்பங்கள், துயரங்களை எடுத்துக்கூறி ஒரு “பகிரப்பட்ட மனிதநேய உணர்வை”சர்வதேச ரீதியில் ஏற்படுத்துவதற்கு பாடுபடும் அதேவேளை, அநியாயங்களுக்கு எதிரான மக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளை நாம் வலுப்படுத்தவேண்டும்.
ஆகவே தான், 9 அம்சங்களை வலியுறுத்தி இந்த “எழுக தமிழ்” நிகழ்வினை நாம் ஏற்பாடு செய்திருக்கிறோம்.

03. கேள்வி: ஜனாதிபதித் தேர்தல் வரவிருக்கும் நிலையில் தமிழ் மக்களை ஒன்று திரட்டி ஒரு செய்தி ஒன்றை கூறுவது இந்த “எழுக தமிழ்” நிகழ்வின் ஒரு முக்கியத்துவம் என்று கூறலாமா?

பதில்: நிச்சயமாக! எவர் ஆட்சிக்கு வந்தாலும், எமது உரிமைகள் இவைதான். இதில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை என்பதையும் நான் மேற்கூறிய எமது நியாயமான கோரிக்கைகளை அவர்கள் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் இந்த “எழுக தமிழ்” வலியுறுத்துகின்றது. அதற்காக ஜனாதிபதித் தேர்தலை கவனத்தில் எடுத்து நாம் இந்த “எழுக தமிழை” ஒழுங்கு செய்யவில்லை. ஏற்கனவே இதன் அவசியத்தை உணர்ந்து செயற்படத் தொடங்கிவிட்டோம்.

தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஒரு மக்கள் இயக்கமாக மேற்கொண்டுவரும் அடக்கு முறைக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியே இந்த “எழுக தமிழ்”. சுபீட்சமான ஒரு இலங்கையை கட்டி எழுப்புவதற்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும் என்பதை சிங்களத் தலைவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

கடந்த காலங்களில் தமிழ் மக்களை அடக்கு முறைகளுக்கு உட்படுத்தி அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்காமல் இனவாத சிந்தனையுடன் செயற்பட்டமை எந்தளவுக்கு இலங்கையின் முன்னேற்றத்தை பாதித்து அதன் வளர்ச்சியை பின்னுக்கு தள்ளி இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டு தேர்தலில் வெற்றிபெறும் ஜனாதிபதியும் அரசியல் கட்சிகளும் இனிமேல் செயற்படவேண்டும் என்பதற்காகவே பின்வரும் 9 அம்சங்களையும் வலியுறுத்தி இருக்கின்றோம்.

அவையாவன:

  1. எமது பூர்வீக நிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நில ஆக்கிரமிப்பு, பௌத்த மயமாக்கல் மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். இவை சம்பந்தமான மகாவலி அபிவிருத்திச் சபையின் நடவடிக்கைகள் வட கிழக்கைப் பொறுத்தவரையில் உடன் நிறுத்தப்பட வேண்டுமா என்பது பரிசீலிக்கப்பட வேண்டும்.
  2. சர்வதேச போர்க்குற்ற விசாரணையில் தற்போது ஏற்பட்டுள்ள தேங்கு நிலை மாற்றப்பட்டு உடனே சர்வதேச விசாரணைகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  3. தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்கள் யாவரும் சர்வதேச சட்டக் கொள்கைகளுக்குப் புறம்பான சட்டமொன்றினால் குற்றவாளிகள் ஆக்கப்பட்டவர்கள் என்பதை உலகறியச் செய்ய வேண்டும். குறித்த சட்டம் இன்னமும் கைவாங்கப்படவில்லை.
  4. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமான நம்பத்தகுந்த விசாரணைகள் நடைபெற வேண்டும். பல மாதக் கணக்கில் போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு குறித்த ஒரு காலத்தினுள் விசாரணைகள் நடைபெறும் ஏன் அரசினால் உத்தரவாதங்கள் வழங்கப்பட வேண்டும்.
  5. வடகிழக்கு மாநிலங்களில் இராணுவ மயமாக்கல் நிறுத்தப்பட வேண்டும். தற்போது இலங்கை இராணுவத்தின் மூன்றில் இரண்டு பங்கு வடகிழக்கு மாகாணங்களிலேயே முகாம் இட்டு உள்ளனர் என்று தெரியவருகிறது.
  6. இடம் பெயர்ந்த எம் மக்கள் அனைவரும் அவரவர்களின் பாரம்பரிய காணிகளில் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும்.
  7. வடக்கு, கிழக்கில் ஏற்படும் பதவி வெற்றிடங்களுக்கு திட்டமிட்ட முறையில் சிங்கள மக்கள் நியமிக்கப்படுவதுஉடனடியாக நிறுத்தப்படவேண்டும்.
  8. யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்துள்ளபோதிலும் யுத்தத்தினால் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு மாகாணங்கள் இன்னமும் மீள கட்டி எழுப்பப்படவில்லை. ஆகவே, யார் ஆட்சிக்கு வந்தாலும் ஒரு விசேட பொறிமுறை உருவாக்கப்பட்டு வடக்கு கிழக்கு மாகாணங்கள் பொருளாதார ரீதியாக கட்டியெழுப்பப்படவேண்டும். சர்வதேச சமூகம் இதற்கான அழுத்தங்களை இலங்கை அரசாங்கத்துக்கு கொடுக்க வேண்டும்.
  9. தீர்வு திட்டம் தொடர்பில் தமிழ் மக்கள் பேரவை பொதுமக்களின் ஆலோசனைகளை பெற்று அரசாங்கத்துக்கு சமர்ப்பித்துள்ள முன்மொழிவுகள் அடிப்படையில் தீர்வுக்கான பேச்சுவார்த்தை மீளவும் ஆரம்பிக்கப்படவேண்டும்.

04. கேள்வி: தமிழ் மக்கள் கூட்டணியின் ஒரு அரசியல் பிரசாரமாகவே இந்த “எழுக தமிழ்”நிகழ்வு ஒழுங்கு செய்யப்படுவதாக ஒரு சிலவிமர்சனங்கள் முன்வைக்கப்படுவது பற்றி என்ன கூறுகிறீர்கள்?

பதில்: இது முற்றிலும் விஷமத்தனமான பிரசாரம்! நான் ஏற்கனவே கூறியபடி, இந்த “எழுக தமிழ்” நாம் 2016 ஆம் ஆண்டு நடத்திய “எழுக தமிழின்” ஒரு தொடர்ச்சியே. அப்போதும் நான் தமிழ் மக்கள் பேரவையின் இணை தலைவராக இருந்தேன். இப்போதும் நான் இணைத் தலைவராக இருக்கிறேன். ஒரே ஒரு வித்தியாசம். அப்போது நான் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று ஒரு கட்சியின் சார்பில் முதலமைச்சராக இருந்தேன்.

தற்போது நான் ஒரு அரசியல்கட்சி சார்பில் தலைவராக இருக்கின்றேன். நான் தமிழ் மக்கள் கூட்டணியை ஆரம்பித்த பின்னர் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டங்களில் பேரவையின் இணைத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கூறி இருந்தேன். ஆனால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் உட்பட பேரவை உறுப்பினர்கள் பேரவையின் நன்மை கருதி என்னைப் பதவி விலக வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். மூன்று முறை தொடர்ந்தும் கேட்டுவந்தும் என்னைப் பதவி விலகாதீர்கள் என்றே கூறி வந்தார்கள்.

ஆனால், நான் தற்போது “எழுக தமிழ்” யோசனையை முன்வைத்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்போது இதனை எனது கட்சி சார்பான நடவடிக்கை என்றும் நான் இணைத் தலைவர் பதவியில் இருந்து விலகவேண்டும் என்றும் கூறுகின்றனர். “எழுக தமிழை” நடத்தாமல் விட்டிருந்தால் நான் இணைத் தலைவர் பதவியில் தொடர்ந்து இருப்பதில் இவர்களுக்கு பிரச்சினை இல்லை.

ஆகவே, எழுக தமிழை நடத்தாமல் குழப்புவதே விமர்சனம் செய்பவர்களின் நோக்கம் என்பது தெளிவாகத் தெரிகிறது. இவர்களின் நிகழ்ச்சி நிரல் என்ன என்பது பற்றி பொது மக்கள் புரிந்துகொள்வார்கள்.

நான் ஏற்கனவே கூறியபடி தற்போதைய சூழ்நிலையில் எழுக தமிழை நடத்துவது மிகவும் அவசியமான ஒன்று. இதனூடாக எந்த அரசியல் இலாபத்தையும் நான் எதிர்பார்க்கவில்லை. பதவியையும், அரசியல் இருப்பிடத்தையும் முக்கியமாக கருதி இருந்தால் நான் தொடர்ந்தும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலேயே இருந்திருக்கலாம். “எழுக தமிழ்” நிகழ்வு எனது கட்சி சார்பாக நடத்தப்படவில்லை. பொது அமைப்புக்களே மிகவும் கஷ்டப்பட்டு இதற்கான பிரசார பணிகளையும் ஏற்பாடுகளையும் செய்துவருகின்றார்கள்.

ஆகவே அவர்களின் கடின முயற்சிகளுக்கு எதிராக மண் தூவாதீர்கள் என்று வினயமாகக் கேட்டுக்கொள்கின்றேன். ஆதரவு அளிக்காவிட்டாலும் பரவாயில்லை, தயவுசெய்து எதிரான செயற்பாடுகளைச் செய்யாதீர்கள். தமிழ் தேசியத்தை பலப்படுத்தும் ஒரு நிகழ்வுக்கு ஊறு விளைவிக்காதீர்கள் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

செப்ரெம்பர் 16 ஆம் திகதி நடைபெறும் “எழுக தமிழ்” நிகழ்வை தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான மருத்துவர் லக்ஷ்மனே தலைமை தாங்கி நடத்துவார். அவரது வழிகாட்டலிலேயே ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. என்னால் முடிந்த அளவுக்கு இந்த போராட்டத்துக்கான உதவியை நான் செய்துவருகின்றேன்.

அன்றைய தினம் வடக்கு கிழக்கில் இருந்து அலை அலையாக எமது மக்கள் யாழ் முற்றவெளியில் திரண்டு தீர்க்கமான ஒரு செய்தியைத் தென் இலங்கைக்கும் சர்வதேச சமூகத்துக்கும் தெரிவிக்க வேண்டும். தயவுசெய்து இன்றே செப்ரெம்பர் 16 ஆம் நாளை குறித்துவைத்துக் கொள்ளுங்கள்.
‘நன்றி’

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்,
முன்னாள் முதலமைச்சர்,
வடமாகாணம்.
செயலாளர் நாயகம்,
தமிழ் மக்கள் கூட்டணி.
இணைத் தலைவர்,
தமிழ் மக்கள் பேரவை.