நீதி அமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கு மகா சங்கத்தினர் எதிர்ப்பு

download 25
download 25

“விகாரைகள் மற்றும் ஆலயங்கள் தொடர்பான சட்டம் தனியான சட்டம்” என்று நீதி அமைச்சர் அலி சப்ரி நாடாளுமன்றத்தில் வெளியிட்ட கருத்துக்கு மகா சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

குறித்த கடிதத்தின் பிரதி ஒன்றை சபாநாயகருக்கும் அனுப்பியுள்ளனர்.

11 பௌத்த பிக்குகள் கையொப்பமிட்டுள்ள குறித்த கடிதம் எல்லே குணவன்ச தேரரால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுபோன்ற தவறான சொற்களுக்கு அமைச்சருக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் ஜனாதிபதியை வலியுறுத்தினர்.

நீதி அமைச்சர் முன்வைத்த அறிக்கையை நாடாளுமன்ற ஹன்சார்ட்டிலிருந்து நீக்குமாறும் மகா சங்கம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெளத்த விகாரைகள் மற்றும் கோயில்கள் சட்டம் ஒரு தனி நபர் சட்டம் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி பெப்ரவரி 12 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

எனினும் பெளத்த விகாரைகள் மற்றும் ஆலயங்கள் சட்டம் அரசியலமைப்பின் 9 வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சட்டமாக இருப்பதால், அமைச்சரின் இந்த அறிக்கை புத்த சாசனத்திற்கு எதிரான ஒரு தீவிரமான அறிக்கை என்று மகா சங்கத்தினர் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்..

‘இலங்கையின் சட்ட முறைமைக்கு ஒரு அறிமுகம்’ என்ற புத்தகத்தை மேற்கோள்காட்டி, “கண்டியன் சட்டம், தேசவழமை சட்டம் மற்றும் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் மட்டுமே இந்த நாட்டின் தனியான சட்டங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.