இலங்கை விஜயத்துக்காக இந்திய வான்வெளியை பயன்படுத்தவுள்ள இம்ரான்கான்

imran khan
imran khan

இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்திற்காக இந்திய வான் வழியைப் பயன்படுத்தி பயணம் மேற்கொள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு இந்தியா அனுமதி வழங்கியுள்ளதாக நம்பகத் தகுந்த ஆதாரங்களை மேற்கொள்காட்டி இந்திய உடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானுக்கு விஜயம் செய்த சில மாதங்களுக்குப் பிறகு இம்ரான் கான் மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும்.

அதன்படி இம்ரான் கான் பாகிஸ்தானிலிருந்த சிறப்பு விமானம் மூலமாக புறப்பட்டு, இன்று மாலை 4.15 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநயாக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைவார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் இலங்கை வரும் இம்ரான்கான் நாளை வரை இலங்கையில் தங்கியிருப்பார்.

பிரதமர் இம்ரான் கான் தனது விஜயத்தின் போது, ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் இருதரப்பு சந்திப்புக்களில் கலந்து கொள்ளும் அதே நேரத்தில், வரத்தக மற்றும் முதலீட்டு மன்றம் மற்றும் விளையாட்டு இராஜதந்திர முயற்சி உட்பட பல உயர்மட்ட ஈடுபாடுகளும் திட்டமிடப்பட்டுள்ளன.

உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, இன்று திகதி மாளிகையில் இடம்பெறவுள்ள பரஸ்பரம் நன்மை பயக்கும் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்விற்கு இலங்கை மற்றும் பாகிஸ்தான் பிரதமர்கள் இருவரும் தலைமை தாங்குவார்கள்.

இந்த ஆண்டிற்கான தனது முதலாவது வெளிநாட்டு உத்தியோகபூர்வ விஜயத்தில், முக்கியமாக ஆடை மற்றும் அணிகலன், மருந்துப் பொருட்கள், விவசாய உணவுப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், இரத்தினங்கள் மற்றும் நகைகள், வாகனப் பாகங்கள், தகவல் தொடர்பாடல் தொழினுட்பம், நிர்மானப் பொருட்கள் மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்கள் போன்றவற்றிலான பாகிஸ்தானின் வர்த்தகத் தலைவர்களைக் கொண்ட ஒரு உயர் அதிகாரமுடைய வர்த்தக மற்றும் முதலீட்டு தூதுக்குழுவுடன் பிரதமர் இம்ரான் கான் வருகை தரவுள்ளார்.

வெளிநாட்டு அமைச்சர் மக்தூம் ஷா மெஹ்மூத் குரேஷி, பிரதமரின் வணிக ஆலோசகர் அப்துல் ரசாக் தாவூத், வெளிவிவகார செயலாளர் சொஹைல் மெஹ்மூத் மற்றும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் பிரதமர் இம்ரான் கானுடன் இந்த விஜயத்தின் போது இணைந்திருப்பர்.

வர்த்தகம் மற்றும் பாதுகாப்பில் இரு நாடுகளும் நெருங்கிய பங்காளிகள், இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது ஒரு முக்கியமான ஆயுத விநியோகஸ்தராக பாகிஸ்தான் பணியாற்றியபோது இரு நாடுகளும் வலுவான உறவுகளை வளர்த்துக் கொண்டனர்.

இலங்கை விஜயத்தின்போது இம்ரான் கான் இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றுவார் என்று முன்னர் கூறப்பட்டது.

அவ்வாறு நிகழ்ந்தால் இம்ரான் கான் இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது காஷ்மீர் விவகாரத்தை எழுப்பலாம் என்பதாலும் இதனால், இந்தியாவுடன் தேவையற்ற பகைமை சம்பாதிக்க நேரிடும் என்பதாலும் அந்த உரை இரத்து செய்யப்பட்டது.

ஏற்கனவே, இம்ரான் இதுபோன்ற பல தளங்களில் காஷ்மீர் விவகாரம் போன்றவற்றை எழுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.