சமிந்தவாஸின் இராஜினாமாவால் அதிருப்தியடைந்த நாமல்

download 13 3
download 13 3

சம்பள கொடுப்பனவுகள் தொடர்பில் சமிந்த வாஸிற்கு ஏதேனும் நெருக்கடிகள் இருப்பின் அதனை கேட்கும் முறையொன்று உள்ளது. இலங்கை கிரிக்கெட் தேசிய அணி தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்க நான்கு மணி நேரத்திற்கு முன்னர் வாஸ் இராஜினாமா செய்தமை குறித்து நான் அதிருப்தியடைகிறேன் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அவருடன் செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு அப்பால், சுற்றுப்பயண கொடுப்பனவுகளையும் விட மேலதிகமாக இந்த சுற்றுப்பயணத்திற்காக மாத்திரம் ஏழரை இலட்சம் ரூபா வழங்க தீர்மானித்தும் அவர் நாளாந்தம் 200 டொலர்களை கேட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளதாக அமைச்சர் சபையில் சுட்டிக்காட்டினார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் வீரர் சமிந்த வாசின் திடீர் இராஜினாமா குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

சமிந்த வாஸின் செயற்பாடுகள் குறித்து தனிப்பட்ட ரீதியில் நான் கவலையடைகின்றேன். அவர் மிகச்சிறந்த வீரர், அதேபோல் சிறந்த பயிற்சிவிப்பாளர். அவ்வாறான ஒருவர் தேசிய அணிக்கு கிடைக்காமல் போனமைக்காக நான் வருத்தப்படுகின்றேன். மறுபக்கம் அவர் வீரராக இருக்க முடியும் அல்லது பயிற்சிவிப்பாளராக இருக்க முடியும் ஆனால் அவரது ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஒரு முறைமை உள்ளது.

பயிற்சிவிப்பாளராக அவருக்கென்ற சம்பளம் குறித்து இலங்கை கிரிக்கெட் சபையுடன் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சுற்றுப்பயணம் ஒன்று செல்லும் வேளையில் ஒப்பந்தத்திற்கு மேலதிகமான கொடுப்பனவுகளும் வழங்கப்படும். இவை உள்ளடக்கிய ஒப்பந்தமொன்றை அவர் செய்திருந்த போதிலும் இறுதி நேரத்தில் அவருக்கான கொடுப்பனவுகளை அதிகரித்து தரக்கோரியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபையுடன் இணக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு ஒரு சுற்றுப்பயணம் செல்லும் வேளையில் ஒப்பந்தத்திற்கு அப்பால் சுற்றுப்பயண கொடுப்பனவுகளும் வழங்கப்படும். அதற்கும் மேலதிகமாக இந்த சுற்றுப்பயணத்திற்காக மாத்திரம் ஏழரை இலட்சம் ரூபா அவருக்கு வழங்க ஏற்கனவே இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அதனை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை மாறாக இராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். கிரிக்கெட் நிருவாக சபையும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளது. அவரது தீர்மானம் குறித்து நான் எதனையும் கூற முடியாது, ஆனால் தேசிய அணி தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்க நான்கு மணி நேரத்திற்கு முன்னர் அவர் இராஜினாமா செய்தமை குறித்து நான் அதிருப்தியடைகிறேன் என்றார்.