மக்கள் சேவைமன்ற நிறுவனத்தின் திட்ட அறிமுகக் கலந்துரையாடல்!

FB IMG 1614167909110
FB IMG 1614167909110

முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச சார்பற்ற நிறுவனமான மக்கள் சேவை மன்றத்தினால்(PEOPLE’S Service Council) கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவின் கொக்கிழாய் கிழக்கு கிராமத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நம்பிக்கை, நல்லுறவு என்பவற்றை கட்டியெழுப்புவதன் மூலம் பல்லின மக்களின் சமூக பொருளாதார மற்றும் சமூக உறவுகளை மேம்படுத்தல் திட்டத்தின் அறிமுகக் கலந்துரையாடலானது மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் பி.ப 2 மணிக்கு மாவட்ட செயலக சிறிய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த திட்டமானது பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாடு மற்றும் வணிக முயற்சிகளில் ஈடுபடுகின்ற பெண்களிற்கான வணிக திட்டத்தினை தயாரித்தல், இளைஞர் யுவதிகளுக்கான மொழி வகுப்பினூடாக உறவுகளை மேம்படுத்தல் என்கின்ற அடிப்படையில் ஆறு மாத காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதனூடாக சக வாழ்வும் மத நல்லினக்கம், மொழியறிவு, திறன் பயிற்சியும் வணிக அபிவிருத்தி, வாழ்வாதார ஒத்துழைப்புடனான வணிக விருத்தி ஆகியன எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

திட்டத்துடன் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களது கருத்துக்கள் மற்றும் ஒத்துழைப்புக்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இக் கலந்துரையாடலில் திட்டமிடல் பணிப்பாளர், கரைதுறைப்பற்று பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர், அரச சார்பற்ற நிறுவனங்களின் மாவட்ட இணைப்பாளர், சமூக சேவைகள், மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு, சிறுதொழில் அபிவிருத்தி பிரிவு, மொழிகள் மேம்பாடு ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள், குறித்த கிராமத்தின் கிராம சேவகர் என பல தரப்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.