சுகாதார சேவையை அத்தியாவசிய சேவையாக உள்ளடக்குமாறு பிரதமர் ஆலோசனை!

Mahintha 720x450 1

புதிய அரசியலமைப்பு தொடர்பிலான வரைவில் சுகாதார சேவையை அத்தியாவசிய சேவையாக உள்ளடக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருடன் அலரி மாளிகையில் நேற்று (01) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவை மற்றும் வைத்தியர்கள் மத்தியில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் முன்வைத்த யோசனைகள் குறித்த கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டுள்ளது.

இதன்போது, புதிய அரசியலமைப்பு தொடர்பிலான வரைவில் சுகாதார சேவையை அத்தியவசிய சேவையாக இணைக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் அனுருத்த பாதெனிய கோரியிருந்தார்.

அதற்கு பிரதமர் இணக்கம் வெளியிட்டிருந்ததுடன், அரச வைத்திய பீடத்துக்கு தெரிவாகும் வைத்தியர்களின் வயதெல்லையை 22 முதல் 23 ஆக குறைக்க கல்வி அமைச்சுடன் இணைந்து ஒன்றிணைந்த செயல் திட்டம் ஒன்றினை தயாரிக்குமாறும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேவேளை, கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையை ஓகஸ்ட் மாதத்திலும், உயர்தர பரீட்சையை டிசம்பர் மாதத்திலும் நடத்தும் புதிய யோசனைக்கு அனுமதியை பெற எதிர்வரும் வாரம் அமைச்சரவையில் பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதன்போது தெரிவித்துள்ளார்.

இதனால் மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளுக்காக மேலதிகமாக செலவிடும் 9 மாத காலத்தை குறைத்துக் கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.