மட்டக்களப்பில் 224 கிலோ பழுதடைந்த மரக்கறிகள் மீட்பு

IMG 0201 2
IMG 0201 2

மட்டக்களப்பு நகரில் மரக்கறிகளை விற்பனை செய்த வியாபார நிலையத்தை இன்று செவ்வாய்க்கிழமை (02) பொதுசுகாதார பரிசோதகர் முற்றுகையிட்டு சோதனையில் மனித பாவனைக்கு பயன்படுத்த முடியாத மரக்கறிகளை விற்பனை செய்த வர்த்தகரை கைது செய்ததுடன் 224 கிலோ கிராம் மரக்கறிகளை மீட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் மிதுன் ராஜ் தெரிவித்தார்.

சுகாதார அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று பகல் குறித்த வியாபார நிலையத்தை கோட்டமுனை பொதுசுகாதார பிரிவு பொது சுகாதார பரிசோதகர் மிதுன்ராஜ் தலைமையிலான பொதுசுகாதார பரிசோதகர் ஆர்.ஜெயரஞ்சன் , எஸ்.அமிர்தாப், ஜெ தீபகுமாரன் கொண்ட குழுவினர் சுற்றிவளைத்து முற்றுகையிட்டு சோதனையிட்டனர்.

இதன்போது மனித பாவனைக்கு பயன்படுத்த முடியாத மரக்கறி வகைகளை விற்பனை செய்து வந்த வியாபாரி ஒருவரை கைது செய்ததுடன் மனித பாவனைக்கு பயன்படுத்த முடியாத 224 கிலோக்கிராம் மரக்கறிகளை மீட்டனர்

குறித்த வர்தக நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு நகர் பகுதிகளில் உள்ள உணவகங்களுக்கு குறைந்த விலையில் பழுதடைந்த மரக்கறி வகைகளை விற்பனை செய்து வந்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்களின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் கைப்பற்றப்பட்ட பழுதடைந்த மரக்கறிகளையும் அதனை விற்பனை செய்து வந்த வியாபாரியையும் சட்ட நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆயர்படுத்தபடவுள்ளதாக மட்டக்களப்பு கோட்டமுனை பொது சுகாதார பிரிவு பொது சுகாதார பரிசோதகர் மிதுன் ராஜ் தெரிவித்தார் .