மேற்கு முனையத்தை இந்தியா – ஜப்பானுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய தீர்மானம்

krkaliya
krkaliya

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இலங்கை துறைமுக அதிகாரசபையுடன் இணைந்து அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

மேற்கு முனைய அபிவிருத்திக்கு இந்தியாவின் அதானி நிறுவனம் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, ஜப்பான் அது தொடர்பில் அறிவிக்கவில்லை. இவ்வாறான கூட்டு அபிவிருத்தி முயற்சிக்கு பெரும்பாலான தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றை ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

கிழக்கு முனைய அபிவிருத்தி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த அரசாங்கத்தினாலேயே கையெழுத்திடப்பட்டது. எவ்வாறிருப்பினும் அது தொடர்பான எதிர்ப்புக்களின் பின்னர், தற்போதைய அரசாங்கத்தின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளமைக்கேற்ப மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரச – தனியார் கூட்டு முயற்சியில் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு வெளிநாட்டு முதலீடுகளுக்கு வாய்ப்பளிக்கப்படும். அதற்கேற்ப ஏற்கனவே ஜப்பான் மற்றும் இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கேற்பவே இந்திய அரசாங்கத்தினால் அதானி நிறுவனத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜப்பான் இது வரையில் முதலீடு செய்யவுள்ள நிறுவனம் தொடர்பில் அறிவிக்கவில்லை. இவ்வனைத்து விடயங்களையும் கவனத்தில் கொண்டு அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். இது ஜனநாயக அரசாங்கம் என்பதால் கிழக்கு முனைய விவகாரத்தில் எழுந்த எதிர்ப்புக்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட்டது.

கிழக்கு முனையம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கே மதகுருமார்களினதும் துறைமுக தொழிற்சங்கங்களினதும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டன. ஆனால் மேற்கு முனையம் தொடர்பான தீர்மானம் புதியதாகும். இதற்கு எதிர்ப்புக்கள் வெளியிடப்படவில்லை. இதன் நிர்வாக பகிர்ந்தளிப்பு தொடர்பில் தீர்மானிப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்றார்.