உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் காணி வனவளத்திணைக்களத்தின் கீழ் இருந்து இதுவரை விடுவிக்கப்படவில்லை!

IMG 9750
IMG 9750

வவுனியா ஓமந்தையில் அமைந்துள்ள உயர்தொழில்நுட்பவியல் நிறுவகம் அமைந்துள்ள காணியை வனவளத்திணைக்களத்தால் விடுவிக்கப்படாமல் உள்ளதாக நிறுவனத்தின் அதிகாரி குற்றம் சாட்டினார்.

வவுனியா பிரதேசசெயலகத்தின் அபிவிருத்திக்குழு கூட்டம் நேற்று இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த உயர்தொழில் நுட்ப கல்விநிறுவகத்தின் கல்வி இணைப்பாளர் பெ. இளங்குமரன், தமது நிறுவனம் நீண்டகாலமாக செயற்பட்டு வருகின்றது. இருக்கின்ற வளங்களை பயன்படுத்தி எமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.

எமது கல்லூரி அமைந்துள்ள காணி 2009 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. எனினும் வனவளத்திணைக்களத்தின் கீழ் இருந்து இதுவரை விடுவிக்கப்படவில்லை. இதனால் உரிமைபத்திரம் பெற்றுகொள்ள முடியவில்லை.

இது தொடர்பாக உரிய திணைக்களத்திற்கு பிரதேச செயலாளரூடாக 2016ஆம் ஆண்டில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நேரடியாக சென்று தெரிவித்தும் எந்த விதபலனும் கிடைக்கவில்லை.

காணிக்கான உரிமைபத்திரம் இன்மையால் மேலதிகமான செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கான நிதியினை பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது என்றார்.

இது தொடர்பாக பிரதேச செயலாளரால் அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதியினை வனவளத்திணைக்களத்திற்கு அனுப்பிவைக்குமாறு ஒருங்கிணைப்பு குழு தலைவர் தெரிவித்ததுடன், எதிர்வரும் பத்து நாட்களிற்குள் இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தனக்கு அறிக்கையிடுமாறு வனவளதிணைக்களத்திற்கு பணித்தார்.