அரபு நாடுகளின் ஆதரவை பெறவே புர்கா தடையை அரசு அறிவிக்கவில்லை – முஜிபுர்

download 31
download 31

இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே அமைச்சர் சரத் வீரசேகர புர்கா தடை தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். மறுபுறம் ஜெனிவாவில் அரபு நாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக புர்காவை தடை செய்வது குறித்து அரசாங்கம் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார். இவ்வாறு மாறுபட்ட கருத்துக்களை கூறி அரசாங்கம் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

சீனி மோசடி தொடர்பில் பரவலாகப் பேசப்படுகின்றமையால் தேசிய கொடி வடிவ கால்மிதி துடைப்பான் மற்றும் புர்கா தடை உள்ளிட்ட விவகாரங்களில் அரசாங்கம் மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சித்தது. இதே போன்று தான் மரண தண்டனை கைதியான நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள அனுமதியளிக்கப்பட்ட விவகாரத்தை மறைப்பதற்காக பிரதமரால் பசுவதை சட்டம் குறித்த விடயம் பரப்பப்பட்டது.

எதிர்க்கட்சி பல விடயங்களையும் கூறி மக்களை ஏமாற்றுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்நிலையில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர புர்கா தடை தொடர்பான அமைச்சரவை பத்திரத்தில் தான் கையெழுத்திட்டுள்ளதாக ஊடகவியலாளர் மாநாட்டில் கூறியுள்ளார். அது தொடர்பில் இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் டுவிட்டர் பதிவொன்றை பதிவிட்ட பின்னர் வெளிவிவகார அமைச்சின் செயலாளரால் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பது அரசாங்கமே என்பது தெளிவாகிறது.

அமைச்சரவை பத்திரம் ஒன்று தயாரிக்கப்படும் போது அது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் வரை இரகசிய ஆவணமாகவே கருதப்படும். ஆனால் அமைச்சர் சரத் வீரசேகர மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டுவதற்காக குறித்தவொரு சமூகத்தினரை மாத்திரம் இலக்காகக் கொண்டு இந்த விடயத்தை ஊடகவியலாளர் சந்திப்பில் பகிரங்கமாகக் கூறுகின்றார். மறுபுறம் ஜெனிவாவில் அரபு நாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் இதற்கு மறுப்பு தெரிவிக்கின்றார்.

அரசாங்கம் என்ற ரீதியில் ஸ்திரமான நிலைப்பாடொன்றைக் கூறாமல் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலைப்பாடுகளை கூற முற்படுகின்றமையால் , சர்வதேசத்தின் மத்தியில் இலங்கையின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கம் நிலைப்பாடொன்றை அறிவிக்கும் போது இந்நாட்டிலுள்ள வெளிநாட்டு தூதுவர்கள் டுவிட்டரில் பதிவுகளை இடும் அளவிற்கு இலங்கையின் கௌரவம் சர்வதேசத்தின் மத்தியில் கேள்விக்குரியாக்கப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவிக்கின்ற அரசாங்கத்திற்கு எதிராகவே வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.