மண்ணை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பை என்னுடைய தலையில் சுமக்கின்றேன் – பிள்ளையான்

as
as

எனக்கு வயல்வெளிகளிலும், குளக்கரைகளிலும் நடக்கக்கூடிய சூழலை இறைவன் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றான். அத்தோடு மக்கள் கொடுத்த வாக்குகளினால் ஒரு அரசியல் பிரமுகராகவும் மக்கள் முன்னிலையில் திகழ்வதற்கு எனக்கு வாக்களித்த மக்களுக்கும் நன்றியைத் தெரிவிக்கின்றேன். அந்த வகையில் எமது மண்ணைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பை என்னுடைய தலையிலும் சுமக்கின்றேன். எம்முடைய ஆட்சிக்காலம் நிறைவடைவதற்குள்ளே நூறு வீதம் இல்லாவிட்டாலும் 70 வீதமாவது மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டும் என நான் தினமும் சிந்தித்து வருகின்றேன் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான் ) தெரிவித்துள்ளார்.

நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில்பற்று பிரதேசத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு உப்பு வெட்டிக்குளம் புனரமைப்பு செவ்வாய்கிழமை(16) மாலை இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு அபிவிருத்தித்திட்டத்தை ஆரம்பித்து வைத்துவிட்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், ஜனாதிபதி, பிரதமர், மற்றும் பஷில் ராஜபக்ஷ ஆகியோரின் எமது மாட்டத்திற்கு ஏற்றாற்போல் சிறந்த திட்டமிடலினூடாக பொருளாதாரக் கொள்கையை வடிவமைத்துள்ளார்கள். எனவே எதிர்வருகின்ற 2025 ஆம் ஆண்டில் இந்த மண்ணிலே பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்திக் கொடுப்போம்.

அத்தோடு, அதபோல் விவசாயத்திலே விவசாயிகள் இன்னும் கூர்மையடைய வேண்டும். எம்மிடம் இருக்கின்ற வளங்களை எவ்வாறு பெருக்குவது என சிந்திக்க வேண்டும். விவசாயிகள் மண் பரிசோதனைகளிலும் ஈடுபட வேண்டும். நவீனத்துவமான செயற்பாடுகளையும் கைக்கொள்ள வேண்டும். இதற்குரிய தொழில்நுட்ப விடயங்களையும், அறிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.