யானை – மனித மோதலை கட்டுப்படுத்த திட்டம் என்கிறார் பாலித பெர்னாண்டோ

nissanka 850x460 acf cropped
nissanka 850x460 acf cropped

கிராமப் புறங்களில் பாரிய பிரச்சினையாக விளங்கும் யானை – மனித மோதலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நவீன செயற்திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக வன ஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு இராஜங்க அமைச்சின் செயலாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ தெரிவித்தார்.

இராஜகிரியிவில் அமைந்துள்ள வன ஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறுகையில்,

“இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 83 யானைகள் உயிரிழந்துள்ளன. விவசாயிகளின் பயிர் நிலங்கள் யானைகளால் சேதமாக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் தங்களது ஜீவனோபாயங்களை இழந்து தவிர்த்து வருகின்றனர்.

இவ்வாறு உயிரிழந்த யானைகளில் 47 யானைகள் மனிதர்களால் கொல்லப்பட்டவை. அதாவது, உள்நாட்டு வெடி மருந்தால் (அக்க பட்டஸ்) சுடப்பட்டு, விஷம் கொடுத்து, மின்சாரத்தை பாய்ச்சி யானைகள் கொல்லப்பட்டுள்ளன. ஏனையவை நோய்வாய்பட்டு, இயற்கையாகவே உயிரிழந்தவை.

ஆகவே, யானை மற்றும் காட்டில் வாழும் உயிரினங்கள் தங்களுக்கான உணவுகளை காடுகளில் பெற்றுக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முதலில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

காட்டு எல்லைக்கு அப்பால், மனிதர்கள் வசிக்கும் இருப்பிடங்களுக்கு போக முடியாதாவாறு மின்சார வேலிகளை அமைத்தால். அதாவது இந்த வேலிகள்  முன்னர் இருந்ததை விடவும் வினைத்திறன் மிக்கவை. அதி நவீன உபகரணங்களைக் கொண்டு அமைக்கப்படவுள்ளன. இந்த மின்சார வேலிகள் உயர் மின் அழுத்தம் கொண்டதுடன், 7 அடி உயரமிக்கவை.

இந்த வேலைத்திட்டமானது எதிர்வரும் மே மாதத்தின் ஆரம்பத்தில் அல்லது நடுப்பகுதியில் ஆரம்பிக்கவுள்ளோம். இதன் முதற்கட்டமாக 1000 கிலோ மீற்றர் வரையான மின்சார வேலிகளை அமைக்க தீர்மானித்துள்ளோம். எமது பணிகளுக்கு போதுமான ஆள் பலம் இன்மையால், முப்படைகள் மற்றும் சிவில் பாதுகாப்பு அமைப்பு எமக்கு உதவி செய்ய முன்வந்துள்ளன. இதன்படி வவுனியா மாவட்டத்தில் சிவில் பாதுகாப்பு படையும், அம்பாறை மாவட்டத்தில் இலங்கை கடற்படையும், அநுராதபுரம் மாவட்டத்தில் இலங்கை இராணுவப் படையும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இலங்கை விமானப்படையும் வேலைகளில் ஈடுபடவுள்ளது.

மின்சார வேலிகளை அமைக்கும் இந்த வேலைத்திட்டதில் ஒவ்வொரு 10 கிலோ மீற்றருக்கும் காவல் அரண்கள் அமைத்து, அதில் இருவரை எந்நேரமும் காவலில் ஈடுபடுத்தவுள்ளோம். இவ்வாறு செயற்படுத்துவதால் யானை – மனித மோதல்களை குறைத்து கொள்ள முடியும் என நம்புகிறேன்.

இதற்காக பயன்படுத்தப்படும் உயர் ரக பொருட்களிலிருந்து சாதாரண ஆணி வரையான சகல பொருட்களும் உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களிடமிருந்தே பெற்றுகொள்ளப்படும்” என்றார்.

இந்த வேலைத்திட்டத்துக்கு வன ஜீவராசி மற்றும் வன பாதுகாப்பு அமைச்சுடன், அமைச்சுடன் தொடர்புபட்ட திணைக்களங்கள், மாவட்ட செயலகங்கள், பிரேதேச செயலகங்கள் என பலவும் ஒன்றிணைந்து செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.