தேங்காய் எண்ணெய் மீதான அச்சத்தை அரசாங்கம் போக்க வேண்டும் – எதிர்க்கட்சி வலியுறுத்தல்

gayanta
gayanta

நாட்டில் தற்போது காணப்படுகின்ற தேங்காய் எண்ணெய் தொடர்பான சர்ச்சை குறித்து உத்தியோகபூர்வமாக தெளிவான நிலைப்பாட்டை அரசாங்கம் அறிவிக்க வேண்டும்.

தமது சகாக்களின் நலன் தொடர்பில் மாத்திரமே சிந்தித்துக் கொண்டிருக்காமல் நாட்டு மக்கள் அச்சமின்றி தேங்காய் எண்ணெய்யை கொள்வனவு செய்வதகான சூழல் விரைவில் உருவாக வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

தேங்காய் எண்ணெய்யை கொள்வனவு செய்வதில் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

சர்ச்சைக்குரிய எண்ணெய் சந்தைகளுக்குச் சென்றுள்ளதா , ஆம் எனில் எவ்வாறு சென்றது என்பதையும் அரசாங்கம் அறிவிக்க வேண்டும்.

தமது சகாக்களின் நலன் தொடர்பில் மாத்திரமே சிந்தித்துக் கொண்டிருக்காமல் நாட்டு மக்கள் அச்சமின்றி தேங்காய் எண்ணெய்யை கொள்வனவு செய்வதகான சூழல் உருவாக்கப்பட வேண்டும்.

அண்மையில் ஒரு சிலரது பைகளை பணத்தால் நிரப்புவதற்காக முன்னெடுக்கப்பட்ட சீனி மோசடியைப் போன்று இவ்விடயத்திலும் செயற்பட வேண்டாம் என்று வலியுறுத்துகின்றோம்.

ஆனால் இது போன்ற முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதைத் தவிர்த்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று அவரது பிரச்சினையை மக்களிடம் கூறிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் நாடளாவிய ரீதியில் சகல பாடசாலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனவே பாடசாலை மாணவர்கள் அடிப்படை சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற கொவிட் நன்கொடையின் மூலம் நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.