மன்னாரில் வீட்டுத்திட்டங்களுக்கான மிகுதி நிதியை வழங்கக் கோரி போராட்டம்

FB IMG 1617087707641
FB IMG 1617087707641


மன்னார் மாவட்டத்தில் அரசினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்களுக்கு வழங்கப்பட வேண்டிய மிகுதி நிதி இது வரை வழங்கப்படாத நிலையில்,குறித்த நிதியை உடனடியாக வழங்க அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி இன்று செவ்வாய்க்கிழமை(30) காலை மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பாதீக்கப்பட்ட மக்களின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பாதீக்கப்பட்ட மக்கள், நாடாளுமன்ற  உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன்,   செல்வம் அடைக்கலநாதன், எஸ்.வினோ நோகராதலிங்கம்,  பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் காலை 9.30 மணியளவில் ஆரம்பமான ஊர்வலம் பிரதான வீதியூடாக மன்னார் பஸார் பகுதியை சென்றடைந்தது.
பின் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு மகஜர் கையளிக்கும் வகையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜரை கையளிக்க மாவட்டச் செயலகத்திற்கு சென்றனர்.
பின்னர் தமது போரிக்கை அடங்கிய மகஜரை மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலனிடம் கையளித்தனர்.

குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடுகையில்,,,,

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வீட்டுத்திட்ட நிதி முழுமையாக கிடைக்கப் பெறாத பயனாளிகளான நாம் முன்வைக்கும் கோரிக்கைகளை மீண்டும் ஒரு தடவை உங்கள் முன் ஞாபகப்படுத்தி எழுத்துமூலம் தெரிவிக்க விரும்புகின்றோம்.
எங்கள் கஸ்டங்களையும், துன்பங்களையும் உளப்பூர்வமாகவும் உணர்வு பூர்வமாகவும் அணுகி அனைத்து வீட்டுத் திட்ட பயனாளிகளினதும் மிகுதிக் கொடுப்பனவை காலம் தாழ்த்தாது விரைவில் பெற்றுத் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் இன்னமும் காத்துக் கொண்டிருக்கின்றோம்.
2017 இலிருந்து 2019 ஆம் ஆண்டு வரை இந்திய உதவி வீட்டுத்திட்டம் ,சமட்ட செவன மாதிரி கிராம வீட்டுத்திட்டம் , மீழ் எழுச்சி, கொத்தணி வீட்டுத்திட்டங்களுக்குள் நாம் உள்வாங்கப்பட்டு ஆரம்ப கட்ட நிதி உதவிகளுடன் நாம் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினரின் திட்ட செயற்படுத்தல் முறைமைகளின் கீழ் எமது வீட்டுத்திட்ட வேலைகளை ஆரம்பித்திருந்தோம்.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஒழுங்குபடுத்துதலின் கீழ் தொடர் வேலைககாக அரச நிதி கிடைக்கும் என்ற முழுமையான நம்பிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட வேலைகளையும் செய்து முடித்திருந்தோம்.
எம்மில் சிலர் முழுமையாக வீட்டத்திட்டத்தை முடித்திருக்கின்றோம்.
அரசாங்கத்திடம் வீடுகளை கோரிய நாம் அனைவரும் சொந்தமாக ஒரு வீட்டைக் கொண்டிராதவர்களே.
நன்பர்கள்,உறவினர்களிடம் கடன் பட்டு,சொந்த நகைகளை அடகு வைத்து ,வட்டிக்கு பணம் பெற்று பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் நாம் இரண்டாம் கட்டமாகவும் ,முழுமையாகவும் கடந்தகால அரசை நம்பி வீட்டுத் திட்டத்தினை நிறைவு செய்திருந்தோம்.
பலர் அரைகுறை வேலைகளுடன் குறைவீடுகளாக ,அரைகுறை வேலைகளுடன் நிறுத்திவைத்துள்ளோம்.
தற்போது ஓலைக்குடிசைகளில்,பழுதடைந்த பழைய வீடுகளில் மழை,வெயில் இயற்கை அனர்த்த இடர்பாடுகளுக்குள் சிக்கிப்போய் செய்வதறியாது வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
பெற்ற கடன்களை திருப்பிச் செழுத்த முடியாது அல்லல்படுகின்றோம் நிம்மதியாக படுத்துறங்க ஒரு இல்லிடம் இல்லாமல் அவதியுறுகின்றோம் நாங்கள் படுகின்ற அவஸ்தைகள் சொல்லில் அடங்காதது.
 எங்கள் கஸ்டங்களை நீக்கி எங்களை சொந்த வீடுகளுக்குள் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் படுத்துறங்கவும் வசிக்கவும் செய்ய உங்களால் மட்டுமே முடியம் என நாம் நம்புகின்றோம் கடந்த ஆட்சியினால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் என கருதி எங்களை புறமொதுக்கி விடமாட்டீர்கள் என முழுமையாக உங்களை நம்புகின்றோம்.
நாம் பட்ட கடன்களை மீட்டெடுக்கவும் ஒவ்வொரு வீட்டினையும் கட்டி முடிக்கவும் கருணை கூர்ந்து எங்கள் மீது இரக்கம் காட்டுங்கள்.எங்களுக்கு நீதி கேட்டு நியாயம் கேட்டு பல கடிதங்கள் இதற்கு முன்னரும் உங்களுக்கும் ,அரசாங்க அதிபர்,தே.வீ.அ.அதிகார சபை உத்தியோகத்தர்களுக்கும் எழுதியிருக்கின்றோம்.
அவர்களின் வாசற்படி ஏறிக்கொண்டீருக்கின்றோம்.வீட்டுத்திட்டங்களுக்கான மீதி கொடுப்பனவு நிதியை இவ்வருடத்திற்குள் பெற்றுத் தருவதாக நீங்களும் பாராளுமன்றத்தில் உறுதியளித்திருக்கின்றார்கள். 
இந்த நாட்டின் பிரதம அமைச்சர் என்ற வகையிலும் வீடமைப்புக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியிலும் நீங்கள மிகுதிக் கொடுப்பனவு நிதியை பெற்றுத்தர உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுவீர்கள் என நம்புகின்றோம். மாவட்டத்திலுள்ள அதிகாரிகளிடம் நாம் எழுத்து மூலமாகவும் நேரிலும் கேட்கும்போதெல்லாம் அவர்கள் அரசாங்கத்தை கேட்குமாறே கூறுகின்றார்கள்.
அரசு நிதியை விடவித்தாலேயே தங்களால் வீட்டத்திட்ட மிகுதிக் கொடுப்பனவை விடுவிக்க முடியும் என பதிலளிக்கின்றார்கள். ஏழ்மையினதும் வறுமையினதும் இறுதி எல்லையில் இருந்து கொண்டிருக்கின்றோம்.
எங்களை கரைசேர்க்க உங்களால் முடியும் என காத்திருக்கின்றோம். கடன் சுமைகள் அனைத்தும் களைந்து எங்கள் சொந்த வீட்டில் நாட்டின் சக பிரஜைகள் போல் வாழ எங்களுக்கு உதவி செய்யுமாறு கேட்டு நிற்கின்றோம்.என குறிப்பிடப்பட்டுள்ளது.