ரஞ்சனுக்கு நியாயம் வழங்க கோரி பிரேரணை சமர்ப்பிப்பேன் – மஹிந்தானந்த

download 2
download 2

சிறை தண்டனை அனுபவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நியாயம் வழங்குமாறு ஆளும் தரப்பின் சார்பில் தனிநபர் பிரேரணையை கொண்டு வர எதிர்பார்த்துள்ளேன். ரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாக்கும் நோக்கம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனுக்கு இருக்கவில்லை என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நல்லாட்சி அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த ரஞ்சன் ராமநாயக்க 2016 ஜூன் 16 ஆம் திகதி எனக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். அவரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினால் உளவியல் ரீதியிலும், சமூதாய ரீதியிலும் பெரிதும் பாதிக்கப்பட்டேன். 500 மில்லியன் நஷ்டஈடு கோரி நுகேகொடை நீதிமன்றில் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தேன்.

நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் சுய தேவைக்காக இவர் பயன்படுத்திக் கொள்ளப்பட்டார். குறிப்பிட்ட ஒரு தரப்பினர் தங்களின் சுய தேவைக்காக இவரை தவறாக வழி நடத்தினார்கள். நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக இவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது அவர் செய்த தவறுகளை உணர்ந்து உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு எதிராக நான் தாக்கல் செய்த வழக்கு நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. என்மீது ரஞ்சன் ராமநாயக்க முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் போலியானவை என்பதால் அவருக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும். எனவே தற்போது அவர் அனுபவிக்கும் சிறை தண்டனை இரட்டிப்பாகும்.

எனினும் என்மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றில் கவலையை வெளியிட்டார். தவறை உணர்ந்ததால் அவருக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கை மீள பெற்றுக் கொண்டு அவருக்கு மன்னிப்பு வழங்கினேன். அரசியலில் பழிவாங்க வேண்டிய தேவை கிடையாது. நல்லாட்சி அரசாங்கத்தில் எனக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை இவரே முன்வைத்தார். இதனை கொண்டு தற்போது பழிவாங்க வேண்டிய தேவை கிடையாது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 103 சாட்சியாளர்கள் இருந்தார்கள். இவருக்கு சார்பாக நீதிமன்றில் முன்னிலையான நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் 3 சாட்சியங்களை மாத்திரம் பரிசீலித்தார். அனைத்து சாட்சியங்கள் குறித்தும் அவதானம் செலுத்தியிருந்தால் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நியாயம் வழங்கப்பட்டிருக்கும்.

ஜெனிவா விவகாரத்தில் இவ்விடயங்களை காண்பித்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தொடர்பில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்கும் நோக்கம் அவருக்கு காணப்பட்டது. இன்று இவ்விடயம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கவலையடைகிறார். இவருக்கு நியாயம் வழங்க ஆளும் தரப்பு சார்பில் நாடாளுமன்றில் தனிநபர் பிரேரணையை முன்வைக்க எதிர்பார்த்துள்ளேன்.