மாகாணசபை தேர்தல் முறையில் சிக்கலுள்ளது – எஸ்.எம். சந்திரசேன

download 2 1
download 2 1

மாகாண சபை தேர்தல் தொடர்பிலான இறுதி தீர்மானம் கட்சி தலைவர் கூட்டத்தில் எடுக்கப்பட்டு அத்தீர்மானம் எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் அறிவிக்கப்படும். மாகாண சபை தேர்தலை தொகுதிவாரி முறையில் நடத்த அமைச்சரவையில் பெரும்பாலான உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளார்கள் என காணி விவகார அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் நேற்று புதன்கிழமை இடம் பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேறகண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சுமார் 3 வருட காலத்திற்கும் அதிகமாக பிற்போடப்பட்டுள்ள மாகாணசபை தேர்தலை நடத்த அரசாங்கம் உரிய கவனம் செலுத்தியுள்ளது. தேர்தலை எம்முறையில் நடத்துவது என்ற சிக்கல் நிலை காணப்படுகிறது. மாகாண சபை தேர்தலை இம்முறை மாத்திரம் பழைய தேர்தல் முறையின் பிரகாரம் நடத்தலாம் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மாகாண சபை தேர்தலை பழையதேர்தல் முறைமையின் பிரகாரம் நடத்த மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் கடந்த திங்கட்கிழமை அமைச்சரவை யோசனை சமர்ப்பித்தார். எத்தேர்தல் முறைமையின் கீழ் மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் என்ற சிக்கல் நிலை காணப்படுகிறது.

இப்பிரச்சினைக்கு கட்சி தலைவர் கூட்டத்தில் ஒரு தீர்வை கண்டு அதனை எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதேசவாரி முறைமையின் பிரகாரம் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என அமைச்சரவையின் பெரும்பாலான உறுப்பினர்கள் யோசனை முன்வைத்துள்ளார்கள்.

மாகாண சபை தேர்தலை பிற்போட வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் போட்டியிட தீர்மானித்துள்ளோம். சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் தனித்து போட்டியிடுவதாக குறிப்பிட்டு கொள்கிறார்கள். தனித்து செல்வதும், இணைந்திருப்பதும் அவரவர் கட்சியின் தீர்மானமாகும்.

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசாங்கத்தை பலவீனப்படுத்த எதிர்க்கட்சியினர் முயற்சிக்கிறார்கள். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களினால் அரசாங்கம் ஒருபோதும் பலவீனமடையாது. சுபீட்சமான எதிர்கால கொள்கைத்திட்டம் முறையாக செயற்படுத்தப்படும் என்றார்.