சஹ்ரானின் பிரசங்கங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய நால்வர் கைது

download 9
download 9

சஹ்ரான் ஹாசிமின் கடும்போக்குவாத கருத்துக்களை இணையத்தளங்களில் வௌியிட்டமை, பிரசங்கங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை ஆகிய குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத விசாரணை பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெல்லம்பிட்டி மற்றும் திஹாரி பகுதிகளைச்​ சேர்ந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய இருவரும் மூதூரில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கட்டாரிலிருந்து ‘வன் உம்மா’ எனும் வாட்ஸப் செயலி ஊடாக சஹரான் ஹாசிமின் கடும்போக்குவாத கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களில் இருவர் கட்டாரில் தொழில்புரிந்து வந்துள்ளதுடன், காவல்துறையினரின் அறிவித்தலுக்கு அமைய கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் திகதி அவர்கள் நாடு கடத்தப்பட்டனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர், சஹ்ரான் தலைமையில் இடம்பெற்ற பிரார்த்தனை தொடர்பான காணொளியும், நிழற்படமொன்றும் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டிருந்தது.

கட்டாரிலிருந்து நாடு கடத்தப்பட்ட இரண்டு சந்தேகநபர்களில் ஒருவரே இவற்றை இணையத்தளத்தில் பதிவேற்றியுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் கூறினார். அவர்கள் இருவரும் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே 37 மற்றும் 38 வயதான இரண்டு சந்தேகநபர்கள் மூதூரில் கைது செய்யப்பட்டதுடன், கடும்போக்குவாத பிரசங்கங்களை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கியதாக சந்தேகநபர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.