முல்லை, ஐயன்குளம் மக்களுக்கு அரச வேலை வாய்ப்பு; மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கவும் நடவடிக்கை!

1604403145 duglas D 2
1604403145 duglas D 2

முல்லைத்தீவு, ஐயன்குளம் மக்கள் எதிர்கொள்ளும் பிர்ச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு ஒரு மாத காலத்தினுள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

இன்று நடபெற்ற(02.04.2021)ஐயன்குளம் காவல் நிலையத்தின் திறப்பு விழா நிகழ்விற்கு வருகைதந்த பிரதேச மக்கள், முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே கிளிநொச்சி மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குறித்த உறுதி மொழியை அளித்துள்ளார்.

ஐயன்குளம் கிராமத்தில் வாழ்ந்து வருகின்ற மக்கள் பல்வேறு அடிப்படை பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். குறிப்பாக கொக்குவிலில் இருந்து ஐயன்குளத்திற்கான வீதி புனரமைக்கப்படாமையினால் நிர்வாக நகரமான முல்லைதீவிற்கு சுமார் 75 கிலோமீற்றர் தூரம் பயணிக்க வேண்டிய நிலைமை காணப்படுவதுடன் சீரான பேருந்து போக்குவரத்துக்களும் மேற்கொள்ளப்படுவதில்லை.

அதேபோன்று, ஐயன்குளம் மக்களுக்கான பிரதேச வைத்தியசாலையான மல்லாவி வைத்தியசாலையில் நிரந்தர வைத்தியர் இன்மை மற்றும் ஆம்புலன்ஸ் வசதி சீராக இல்லாமை போன்ற காரணங்களினால் உரிய நேரத்தில் வைத்திய சிகிச்சையை பெற்றுக்கொள்வதும் கடினமான காரியமாக காணப்படுகின்றது.

குறித்த விடயங்கள் மற்றும் யானைவேலியின் அவசியம், வேலையில்லாப் பிரச்சினை உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக பிரதேச மக்களினால் நிகழ்வில் கலந்து கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் சட்டம் ஒழங்கு அமைச்சர் சரத் வீரசேகர போன்றோரிடம் எடுத்துரைக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அனைத்தும் முன்னுரிமை அடிப்படையில் தீர்த்து வைக்கப்படும் எனவும், அவை தொடர்பான நடவடிக்கைகளும் ஒரு மாத காலத்தினுள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், ஐயன்குளம் கிராமத்தினை சேர்ந்த கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் சித்தியடையாத சுமார் 20 இளைஞர் யுவதிகளுக்கு அரசாங்க வேலை வாய்ப்பை வழங்க நடடிவடிக்கை மேற்கொள்வதாகவும், அதற்கான பெயர்ப் பட்டியலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளிக்குமாறும் தெரிவித்தார்.

மேலும், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த பெண்களை காவல்துறை சேவையில் இணைத்துக் கொள்ள இருப்பதனால், ஆர்வமுள்ளவர்கள் அதற்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் சட்ட ஒழுங்கு அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் சரத் வீரசேகர ஆகியோரினால் மருதங்கேணி பிரதேசத்திலும் இன்றைய தினம் புதிதாக ஒரு காவல் நிலையம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.