மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்வு!

IMG 6780
IMG 6780

தமிழ்தேசியத்தின்பால் ஓங்கி ஒலித்த குரலான ஓய்வுநிலை ஆயர் அமரர் வண இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களின் இறுதி நல்லடக்க நாளான இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தைசெல்வா சிலை வளாகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சி சிரேஷ்ட தலைவருமான பொ.செல்வராசா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் மறைந்த முன்னாள் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களின் படத்திற்கு மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவனால் மலர் மாலை அணிவிக்கப்பட்டதன் பின் நிகழ்வில் கலந்துகொண்டவர்களினால் மெழுகுவர்த்தி சுடர்கள் ஏற்றப்பட்டு மௌனப் பிரார்தனையும், அன்னாரின் நினைவு தொடர்பாக நினைவுரையும், இரங்கல் உரையும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், ஞா.ஸ்ரீநேசன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இ.பிரசன்னா, மா.நடராஜா, மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், தமிழரசுகட்சி முக்கியஸ்தர்கள், மதப்பெரியார்கள், மாநகரசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரளவார்கள், ஊடகவியலாளர்கள், கலந்துகொண்டனர்.

ஆன்மீக தலைவராக இருந்து தமிழ் தேசியத்தின்பால் அக்கறையுடன் செயலாற்றி வடக்கு கிழக்கு மக்கள் பல நெருக்கடிகளையும், இனப்படுகொலைகளையும், தடைகளையும் சந்தித்த வேளைகளில் எல்லாம் தேசியரீதியாகவும் ,சர்வதேச ரீதியாகவும் துணிந்து குரல் கொடுத்த ஆண்டகை இராஜப்பு ஜோசப் அடிகளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் கலாநிதி அருட்தந்தை நவரெட்னம் அடிகளாரினால் சிறப்பு நினைவுரை நிகழ்த்தப்பட்டது.

மட்டக்களப்பில் இடம்பெறும் இந்த அஞ்சலி வணக்க நிகழ்வானது கொரோணா நோய் பாதுகாப்பை கருத்தில்கொண்டு முக கவசம், சுகாதாரநடைமுறைகளை பின்பற்றி நடைபெற்றது.