சுற்றுலாத்துறை நிறுவனங்களை இணைக்க அமைச்சரவை அனுமதி!

download 16
download 16

2005 ஆம் ஆண்டு 38 ஆம் இலக்க சுற்றுலா நடவடிக்கை சட்டத்தை முடிவுறுத்தி புதிய சுற்றுலா நடவடிக்கை சட்டத்தை கொண்டுவர அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நேற்று (05) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

2005 ஆம் ஆண்டு 38 ஆம் இலக்க சுற்றுலா நடவடிக்கை சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய ஒட்டுமொத்த சுற்றுலாத்துறையை 04 முக்கிய நிறுவனங்களாக பிரித்து இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகம், இலங்கை சம்மேளனப் பணியகம் மற்றும் இலங்கை சுற்றுலாத்துறை மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம் போன்றன நிறுவப்பட்டுள்ளன. ஆனாலும் ஒட்டுமொத்த சுற்றுலாத்துறையும் 04 நிறுவனங்களுக்கு பிரிந்து உள்ளமையால் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளில் பிரச்சினை மேலெழுதல் மற்றும் வளங்கள் வீண்விரயம் போன்றன இடம்பெறுவதாக தெரியவந்துள்ளது.

அதற்கமைய சுற்றுலாத்துறையின் நிலைபேறான அபிவிருத்தியை உறுதிப்படுத்துவதற்காக 2005 ஆம் ஆண்டு 38 ஆம் இலக்க சுற்றுலா நடவடிக்கை சட்டத்தை முடிவுறுத்தி புதிய சுற்றுலா நடவடிக்கை சட்டத்தின் சட்டமூலத்தை தயாரிப்பதற்கும் அதன்மூலம் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகம், இலங்கை சம்மேளனப் பணியகம் போன்றவற்றை இணைத்து ´இலங்கை சுற்றுலாத்துறை அதிகார சபை´ எனும் பெயரில் புதிய அதிகாரசபையை நிறுவுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.