தரமற்ற உணவுக்கெதிராக நீதிமன்றத்தை நாடவுள்ள நுகர்வோர் இயக்கம்!

82125075 74079940 2
82125075 74079940 2

நாட்டு மக்கள் பயன்படுத்தும் உணவு பொருட்களில் உடல் ஆரோக்கியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சு பதார்த்தங்கள் கலக்கப்பட்டுள்ளன என்பதை உணவு தர நிர்ணயம் தொடர்பில் ஆராயும் அரச அதிகாரிகள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். பாதுகாப்பான உணவினை நாட்டு மக்களுக்கு வழங்கும் நடவடிக்கைகயை அரசாங்கம் இனியாவது முன்னெடுக்க வேண்டும். தர நிர்ணய நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் சித்திகா சேனாரத்னவிற்கு எதிராக முறையான விசாரணைகள் முன்னெடுக்காவிடின் நீதிமன்றினை நாடுவோம் என நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்படும் உணவு பொருட்களில் நச்சுபதார்த்தங்கள் கலக்கப்பட்டுள்ளமை குறித்து தற்போதைய சூழலில் எழுந்துள்ள சர்ச்சை நிலை குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

உடல் ஆரோக்கியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உணவு பொருட்களை நாட்டு மக்கள் அதிகளவில் உட்கொள்கிறார்கள் என்பதை ஆரம்ப காலத்தில் இருந்து குறிப்பிட்டு வருகிறோம். சுகாதாரமான உணவினை மக்களுக்க வழங்கும் தேசிய கொள்கையினை ஆட்சியில் இருந்து எந்த அரசாங்கமும் இதுவரையில் முன்னெடுக்கவில்லை. உற்பத்தி நிறுவனங்களின் நலன் குறித்து மாத்திரம் கவனம் செலுத்தப்பட்டுள்ளன.

இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயில் அம்லாடொக்சின் நச்சு பதார்த்தம் கலக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளன. இவ்வாறான தரமற்ற உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை இதொன்றும் முதல் முறையல்ல இதற்கு முன்னரும் இவ்வாறான தரமற்ற உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இலாப நோக்கத்திற்காக தரமற்ற உணவு பொருட்களை விநியோகிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தால் இவ்வாறான பிரச்சினைகள் தற்போது தோற்றம் பெற்றிருக்காது.

நச்சுத்தன்மையான உணவு பொருட்களை உட்கொள்ளும் மக்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை வகிக்கிறது. தரமற்ற உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன என்பதை பொறுப்பில் உள்ள அரச அதிகாரிகள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அரசாங்கம் இனியாவது நாட்டு மக்களுக்கு தரமான உணவினை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தர நிர்ணய சபையின் பணிப்பாளர் நாயகம் சித்திகா செனவிரத்னவின் கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்லாடொக்சின் கலக்கப்பட்ட உணவு பொருட்கள் பல இறக்குமதி செய்யப்படுகின்றன. அவற்றை குறிப்பிட்டால் நிறுவனங்கள் நட்டமடையும் என பொறுப்பற்ற வகையில் குறிப்பிட்டுள்ள கருத்து தொடர்பில் முறையான விசாரணை நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். இல்லாவிடின் நுகர்வோரின் உரிமைகளை பாதுகாக்க நீதிமன்றத்தை நாடுவோம் என்றார்.