நாடாளுமன்றத்தில் மஹிந்தானந்தவும் சயித் பிரேமதாஸவும் வாக்குவாதம்!

thumb large 8755
thumb large 8755

எதிர்க்கட்சி தலைவரும், சம்பந்தனுமே ரஞ்சன் ராமநாயக்கவை சிறைக்கு அனுப்பினர் எனவும், ரஞ்சனின் வழக்கை ஜெனிவா வரையில் கொண்டு செல்லும் சூழ்ச்சியை எதிர்க்கட்சியினர் முன்னெடுப்பதாகவும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சபையில் குற்றம் சுமத்தினார்.

இதனை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முழுமையாக நிராகரித்ததுடன் அமைச்சர் மஹிந்தானந்தவுடன் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.

நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச 27/2 கீழ் சிறப்பு கூற்றொன்றை எழுப்பி சிறைப்படுத்தப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க குறித்து கருத்து தெரிவித்தார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, ரஞ்சன் ராமநாயக்க குறித்து எதிர்க்கட்சி தலைவர் நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாக பேசி வருகின்றார்.

அண்மையில் ரஞ்சன் ராமநாயக்கவை நீதிமன்றத்தில் சந்தித்தேன். அன்று அவர் கூறிய கதையை கேட்டதும் எனது மனம் இளகிவிட்டது. இன்று அவர் சிறையில் இருப்பதற்கு எதிர்க்கட்சி தலைவரும், சம்பந்தனுமே காரணம் என அவர் என்னிடம் கூறினார். அவருடைய வழக்கிற்கு 103 சாட்சியாளர்கள் இருந்தனர் எனவும், ஆனால் மூவருடன் வழக்கை முடிவுக்கு கொண்டுவர கூறியதாக என்னிடம் தெரிவித்தார். இதனை நான் பொறுப்புடன் தெரிவிக்கின்றேன், உங்களுக்கு தேவை என்றால் நான் அவரது வாக்குமூலத்தை பெற்றுத்தருகின்றேன்.

அதுமட்டுமல்ல ரஞ்சன் ராமநாயக்கவின் வழக்கை இப்போது ஜெனிவாவிற்கு கொண்டு செல்வோம் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறி வருகின்றனராம். ஆனால் சஜித் பிரேமதாசவிற்கு இனியும் துணை போக மாட்டேன். ஜெனிவா கடிதத்தில் நான் கையொப்பமிடவும் மாட்டேன் என அவர் என்னிடம் கூறினார்.

ரஞ்சனை சிறைக்கு அனுப்பி, அவருக்காக இருந்த சாட்சியங்களை மறைத்து அவரது வழக்கை ஜெனிவா வரையில் கொண்டு செல்லும் முயற்சியில் எதிர்க்கட்சி ஈடுபட்டு வருகின்றது.

சிறையில் ரஞ்சனுக்கு உணவு இல்லை, அவரை பார்க்க செல்ல ஒருவர் இல்லை, ஆடைகள் இல்லை, ஆனால் அவருக்காக நீலிக்கண்ணீர் வடித்து அவரை வைத்து அரசியல் செய்கின்றனர். ரஞ்சன் ராமநாயக்க இன்று தனிமைப்பட்டுவிட்டார் என கூறினார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறுவது முற்றிலும் பொய்யான கருத்தாகும். நானும் சம்பந்தன் எம்.பியும் இணைந்து ரஞ்சன் ராமநாயகவை சிறையில் அடைத்ததாக அவர் கூறும் வாக்கியத்தை ஹன்சார்டில் இருந்து நீக்க வேண்டும் என்றார்.

இதன்போது மீண்டும் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய அமைச்சர் மஹிந்தானந்த “நான் கூறும் விடயங்களுக்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். வேண்டுமானால் நாளை ஊடக சந்திப்பொன்றை நடத்தி இந்த உண்மைகளை கூறுகின்றேன்.

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 103 சாட்சிகள் இருக்கவில்லையா ? அதனை மூன்று சாட்சியங்களுடன் முடித்துவிட கூறவில்லையா? இந்த வழக்கில் சுமந்திரன் ஆஜராகவில்லையா ? சஜித் பிரேமதாச அவருக்கு அனுமதி வழங்கவில்லையா ? இதையெல்லாம் சஜித் மறுக்க முடியுமா. ரஞ்சனை சிறைக்கு அனுப்பி அவரை ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக்கு கொண்டுசெல்ல சூழ்ச்சி செய்துள்ளனர் என்றார்.

மீண்டும் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய சஜித் பிரேமதாச, நான் சுமந்திரனை நியமிக்கவில்லை, ரஞ்சன் ராமநாயக்கவிற்காக ஆஜராக ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவையே நியமித்தேன். சுமந்திரனை நான் நியமிக்கவே இல்லை என்றார்.

இதற்கு பதில் தெரிவித்த அமைச்சர் மஹிந்தானந்த, உங்களை போன்று பொய்களை வேறு யாராலும் கூற முடியாது, ரஞ்சனுக்காக சுமந்திரனை நியமித்தது நீங்கள்தான் என ரஞ்சன் ராமநாயக்கவே என்னிடம் கூறினார். ஆகவே நீங்கள் தான் இந்த சூழ்ச்சியை செய்துள்ளீர்கள் என்றார். இதனை அடுத்து எதிர்க்கட்சி தலைவர் தொடர்ச்சியாக ஒழுங்குப்பிரச்சினை எழுப்பியும் அதற்கு சபாநாயகர் செவிமடுக்கவில்லை. இதனால் சபையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.