யாழில் மூடப்பட்டிருந்த வர்த்தக நிலையங்களை மீள திறக்க அனுமதி

க. மகேசன்
க. மகேசன்

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் கொரோனா பரவல் அச்சநிலை காரணமாக முடப்பட்டிருந்த வர்த்தக நிலையங்களை மீளத் திறப்பதற்கு அனுமதியளிக்கப்படுவதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ். நகர வர்த்தகர்களிடம் பெறப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டோரின் கடைகள் தவிர ஏனைய கடைகளை நாளை (வியாழக்கிழமை) முதல் திறக்க அனுமதிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“கடந்த 26ஆம் திகதி முதல் யாழ். நகரத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று பரவலையடுத்து வர்த்தக நிலையங்களில் பணியாற்றுவோர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் கடந்த 14 நாட்களாக அவர்களிடம் இரண்டு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், அவர்களில் தொற்று கண்டறியப்பட்டோரின் கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகளை நாளை முதல் திறக்க அனுமதிப்பதற்கு நேற்று அவசரமாகக் கூடியிருந்த யாழ். மாவட்ட கொரோனா தடுப்புச் செயலணி தீர்மானம் எடுத்திருந்தது.

மேலும், தற்போது சித்திரைப் புத்தாண்டு பண்டிகைக் காலமாகையால் மக்கள் கட்டாயம் ஒன்றுகூடல்களைக் தவிர்க்க வேண்டும்.

இதேவேளை, மக்கள் ஒன்றுகூடாமல் தடுப்பதற்கு யாழ். நகரப் பகுதிகளில் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என அவர் கூறியுள்ளார்.