பாலஸ்தீனியர்களுக்கு அமெரிக்கா நிதியுதவி!

download 1 8
download 1 8

பாலஸ்தீனியர்களுக்கு 235 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்குவதாக ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் புதன்கிழமை அறிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2018 இல் அமெரிக்க உதவியைக் குறைத்ததில் இருந்து கடுமையான நிதி நிலைமையை எதிர்கொண்டுள்ள பாலஸ்தீனிய அகதிகளை ஆதரிக்கும் ஐக்கிய நாடுகளின் நிறுவனத்திற்கு மீண்டும் நிதி வழங்குவதற்கான அமெரிக்காவின் திட்டங்கள் இதன் மூலம் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பாலஸ்தீனியர்களுடனான அமெரிக்க உறவுகளை சரிசெய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக, மனிதாபிமான, பொருளாதார மற்றும் அபிவிருத்தி உதவி உள்ளிட்ட தொகுப்பினை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் புதன்கிழமை விவரித்துள்ளார்.

அத்துடன் இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் செழிப்பு, பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் ஆகியவற்றை உடனடி காலப்பகுதியில் உறுதியான வழிகளில் முன்னேற்றுவதில் அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இந் நிலையில் பைடன் நிர்வாகத்தின் இந்த செயலை வரவேற்றுள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவனம் வரவேற்றுள்ளது.

2018 இல் பாலஸ்தீனிய அதிகாரத்துடனான உறவுகளைத் துண்டித்த பின்னர் ட்ரம்ப் நிர்வாகம் பாலஸ்தீனியர்களுக்கு கிட்டத்தட்ட அனைத்து உதவிகளையும் நிறுத்தியது.

இந் நிலையில் கடந்த ஜனவரி 20 ஆம் திகதி பதவியேற்ற அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தனது முன்னோடிகளை விட பாலஸ்தீனிய உறவுகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையை எடுப்பதாக உறுதியளித்தமையும் குறிப்பிடத்தக்கது.