தேயிலைக் கைத்தொழிலை வீழ்ச்சியடைய விடமாட்டோம் -கோட்டாபய

download 2 7
download 2 7

நாட்டின் சுபீட்சத்தின் அடையாளமாகக் காணப்படும் தேயிலைக் கைத்தொழில் வீழ்ச்சியடைவதற்கு இடமளிக்கப்படமாட்டாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தேயிலை தொழிற்துறையினை மேலும் வலுவுடன் முன்னோக்கி கொண்டு செல்வதற்காக, தேயிலைப் பயிர்ச் செய்கையாளர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிராமிய மக்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத்தரத்தை உருவாக்கிக் கொடுக்காமல் கிராமத்தை முன்னேற்ற முடியாது.

விவசாயத்தின் மேம்பாட்டுக்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவது கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கேயாகும்.

இறக்குமதியை கட்டுப்படுத்தி நாட்டில் பயிரிடக் கூடிய அனைத்துப் பயிர் வகைகளையும் பயிரிடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியது வெளிநாட்டு விவசாயிகளுக்கு சென்ற நிதியை உள்நாட்டு விவசாயிகளுக்கு வழங்குவதற்காகும்.

பயிரிடக்கூடிய அனைத்து நிலங்களையும் விவசாயத்திற்காக பயன்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு புதிய தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்தி விளைச்சலை அதிகரிப்பதற்கும் இளைஞர் சமுதாயத்தை இந்தத் துறையில் ஊக்குவிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கொவிட்19 சவாலுக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்க முடிந்தமைக்கு அரசாங்கம் முன்னெடுத்த சரியான வேலைத்திட்டங்களே காரணமாகும்.

தற்போது அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றத்தைக் காணக்கூடியதாக உள்ளதோடு, எதிர்காலத்தை கருத்திற்கொண்டு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நாட்டில் நடைமுறைப்படுத்தி வருவதாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

பிரச்சினைகளைத் தீர்த்து நாட்டின் வெற்றிக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென மகா சங்கத்தினர் ஜனாதிபதியிடம் இதன்போது வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.