அரசியல் கைதியின் தாயாருக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல்!

625.500.560.350.160.300.053.800.900.160.90 2021 04 08T174550.975
625.500.560.350.160.300.053.800.900.160.90 2021 04 08T174550.975

தமிழ் அரசியல் கைதி ஒருவரின் தாயாருக்குத் தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்து இன்று கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குரலற்றவர்களின் குரல் அமைப்பு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“தமிழ் அரசியல் கைதி ஒருவரின் தாயாரான கோண்டாவில் கிழக்கில் வசிக்கும் தேவராசா தேவராணி, அரசியல் கைதிகளின் விடுதலைக்காகத் தொடர்ந்து போராடி வருகின்றார். இவர் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஒழுங்குபடுத்தப்படும் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு தனது கோரிக்கையைப் பதிவு செய்து வருகின்றார்.

அந்தவகையில், கடந்த செவ்வாய்க்கிழமை, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கைதிகளுக்காகக் குரல் கொடுத்தார். அன்றைய தினம் இரவு இனந்தெரியாத நபர் ஒருவர் தொலைபேசி மூலம் அவரைத் தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

பின்னர் தொடர்ச்சியாக வேறு தொலைபேசி இலக்கங்களில் இருந்து அச்சுறுத்தும் வகையில் அழைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதானால் பயமுற்று, தனியாக வசிக்கும் குறித்த தாய் குரலற்றவர்களின் குரல் அமைப்பிடம் குறித்த விடயத்தை தெரியப்படுத்தினார்.

அதையடுத்து குறித்த தாய் இன்று கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார்.

இதற்கு முன்னரும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்துகொண்டால் இனந்தெரியாதவர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள் எனவும், தனியாக வசிக்கும் தனக்குப் பயமாக உள்ளது எனவும் குறித்த தாயார் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு மறைமுகமாக அச்சுறுத்தல் விடுக்கும் சம்பவங்கள் பரவலாக இடம்பெற்று வருகின்றன. அவர்கள் வெளியில் சொல்வதற்கு மிகவும் பயப்படுகின்றார்கள். தமது உறவுகளின் விடுதலைக்காக ஜனநாயக ரீதியில் போராடும் உறவுகளை அச்சுறுத்தும் செயற்பாடுகள் வருத்தமளிக்கின்றன” – என்றுள்ளது.