இஸ்லாமிய பயங்கரவாதத்தினால் பாரிய ஆபத்து

5 grt
5 grt

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை அடியோடு தோற்கடிக்காவிட்டால் எதிர்காலத்தில் பாரதூரமான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நேரிடும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த ஆபத்தை பிராந்திய நாடுகள் உணர்ந்துள்ளதுடன் இப்புதிய பயங்கரவாதத்தை தோற்கடிக்க ஒத்துழைப்புகளை வழங்கவும் அந்நாடுகள் தயாராகவுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் ஆளணிகள் பயிற்சிக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெற்றிக்கொண்டதன் 10ஆம் ஆண்டு நிறைவை இஸ்லாமிய அடிப்படைவாதத் தாக்குதல்கள் காரணமாக கொண்டாட முடியாது போனது. ஆசியாவின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது எமது நாடு மிகச் சிறிய தீவாகும்.

நிலப்பரப்பு, கடற்படை, விமானப்படையுடன் கூடிய ஒரு தீவிரவாதமே அன்று எமது நாட்டில் காணப்பட்டது. ஆசியாவில் சிவிலியன்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட மிகப் பெரிய பயங்கரவாதத் தாக்குதலாக கடந்த ஏப்ரல் 21 தாக்குதல் காணப்படுகிறது. எமது நாடு சிறிய தீவாக இருந்தாலும் நாம் எதிர்கொள்ளும் சவால்கள் சிறியவையல்ல. 2008ஆம் ஆண்டு மும்பாயில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் இந்தியர்கள் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. எனினும், கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்திய அனைவரும் இலங்கையர்களே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அச்சுறுத்தல் எமது நாட்டுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளின் நலனுக்காக இந்த பயங்கரவாதத்தை தோற்கடிக்க வேண்டும். இந்த ஆண்டில் இரண்டு சந்தர்ப்பங்களில், இலங்கையைச் சேர்ந்த இஸ்லாமிய பயங்கரவாதிகள் படகு மூலம் இந்தியாவுக்குள் நுழைய முயன்றுள்ளதான தகவல்களால் மக்கள் அச்சமடைந்ததுடன், இந்தியாவின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அச்சுறுத்தலை நம்மால் கட்டுப்படுத்த முடியாவிட்டால், இந்தியா, மாலைதீவு, பங்களாதேஷ் மட்டுமன்றி மியன்மார், தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளுக்கும் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்படும்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் நாம் தரையிலும் கடலிலும் வானிலும் செல்ல வேண்டியிருந்தாலும் புதிய பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள புலனாய்வுத்துறையின் நடவடிக்கைகள் அவசியமாகிறது.

துரதிர்ஷ்டவசமாக கடந்த ஐந்து ஆண்டுகளாக நாட்டின் புலனாய்வுத்துறை முடங்கியிருந்தது. இதேவேளை, இராணுவத்துக்கு சர்வதேச மட்டத்தில் கிடைக்கக் கூடிய கௌரவத்தை பெற்றுக்கொடுப்பதற்காகவும் எமது அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் பிரதமர் தனது நீண்ட உரையில் அறிவித்துள்ளார்.